பச்சை நுரையீரல்கள்! அப்படின்னா?

பச்சை நுரையீரல்கள்! அப்படின்னா?
Published on

'நான் விதைத்து, என்னுடன் சேர்ந்து வளர்ந்த புன்னை மரம் இது. இது எனக்குத் தங்கை போல. இந்த மரத்தின் கீழ் உன்னைக் கட்டித் தழுவ வெட்கமாக இருக்கிறது' என்று தலைவி தலைவனிடம் சொல்லுவதாகப் பாடுகிறது நற்றிணை.

இயற்கையின் எந்த அம்சத்தை விடவும் மரங்களுடனான நமது பிணைப்பு மிகவும் அணுக்கமானது. அதேசமயம், மனிதர்களால் அதிகம் ஆபத்துக்குள்ளாவதும் மரங்கள்தான். அடுத்த வீட்டுக்குள் ஊடுருவுகிறது, சண்டை வேண்டாம் என்று கிளைகளைக் கழித்துவிடச் சொல்கிறோம். பழம் தரும் மரங்களை வெட்டி சமன்படுத்திவிட்டு, வீடு கட்டிய பின்பு க்ரோட்டன்ஸ் செடிகளை நட்டு அழகு பார்க்கிறோம். அப்பார்ட்மெண்ட்கள் கட்டுவதற்காக, சாலை விரிவாக்கத்துக்காக, கட்டுமானப் பணிகளுக்காக, மேம்பாலங்கள் அமைப்பதற்காக, நகரமயமாக்கலின் விளைவாக என்று பல காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு மரம் வெட்டப்படும்போதும் பூமி ஒரு செல்வத்தை இழக்கிறது.

2017ம் ஆண்டில் மட்டும், ஒவ்வொரு நொடியும், ஒரு ஃபுட்பால் மைதானம் அளவுக்குப் பரப்பளவுள்ள ஒரு காடு அழிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. ஒரு நொடிக்கே இவ்வளவு என்றால், ஒரு வருடம் முழுவதும் அழிக்கப்பட்ட காட்டின் அளவை யோசித்தால் தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட பங்களாதேஷின் மொத்தப் பரப்பளவு அது!

புவியின் வரலாற்றில் ஏதோ ஒரு புள்ளியில் மனித இனம் தன் முதல் மரத்தை வெட்டி சாய்த்திருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்திலிருந்து கணக்கெடுத்தால், நாம் இதுவரை வாழ்ந்த மொத்த மரங்களில் 46 சதவிகித மரங்களை வெட்டியிருக்கிறோமாம்! வருடாவருடம் காடுகளை அழிக்கும் விகிதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது மேலும் கவலையளிக்கக்கூடிய விஷயம்.

'மரம்' என்றதும் நாம் கண்ணை மூடி, காட்டுக்குள் இருக்கிற, அண்ணாந்து பார்த்து கழுத்து வலிக்கக்கூடிய ஒரு மரத்தை நினைத்துக்கொள்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் மரங்களும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் இவை 'Urban forests' என்று அழைக்கப்படுகின்றன. காட்டுக்குள் இருக்கிற மரங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, நகர்ப்புறங்களில் இருக்கிற மரங்களும் அந்த அளவுக்கு முக்கியமானவை.

நகரங்களின் எல்லை விரிவாகிக்கொண்டே போகிறது, புறநகர்ப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களோடு சேர்ந்துகொள்கின்றன. இப்படி ஒரு நகரம் விரிவாக்கப்படும்போதோ, ஒரு கிராமம் நகரமாக உருமாறும்போதோ அங்கு முதலில் பலி கொடுக்கப்படுபவை பெருமரங்கள்தான். 'காடுகளை அழித்தால்தானே தவறு? நகரங்களில் நின்றுகொண்டிருக்கிற பத்து மரங்களை வெட்டினால் பெரிதாக பாதிப்பு இருக்காது' என்று நாம் இதைப் புறந்தள்ளலாமா?

'நிச்சயம் கூடாது' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். பல பெரு நகரங்களின் சராசரி வெப்பநிலை, சுற்றியுள்ள கிராமங்களின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். கட்டுமானப் பொருட்கள், கூட்டம், மாசுபாடு ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. ஒரு நகரத்துக்குள்ளேயே சில இடங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இதை நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island) என்று அழைக்கிறார்கள். இதுபோன்ற வெப்பத் தீவுகள் உருவாகாமல் இருப்பதில் மரங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. ஏற்கெனவே வெப்பத் தீவுகள் அதிகமாக இருக்கும் ஒரு நகர்ப்புறத்தில், வெட்டப்படுகிற ஒவ்வொரு மரமும் பெரிய இழப்புதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில் இன்னொரு அம்சமும் உண்டு. மரங்கள் அதிகமாக இருக்கிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மனநலமும் உடல் நலமும் சிறப்பாக இருப்பதாகத் தெரிவிக்கிறது 2018ல் வெளியான அமெரிக்க இருதயவியல் கழகத்தின் ஓர் ஆய்வு. மரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களுக்கு இருதய நோய், பக்கவாதம் ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மரத்தின் மதிப்பைக் கணக்கெடுக்கும்போது இந்தப் பயனையும் சேர்த்துக்கொண்டால் அது பல கோடியாக உயரலாம். உடல் நலத்துக்கான விலையை நம்மால் கணக்கிட முடியுமா என்ன?!

மரங்கள் பச்சை நுரையீரல்கள். நாம் சுதந்திரமாக சுவாசிக்கவும் நலமுடன் வாழவும் அவை கண்ணுக்குத் தெரியாமல் உதவிக்கொண்டே இருக்கின்றன. காற்றின் மாசை வடிகட்டி அவை பூமிக்கே ஆசுவாசம் தருகின்றன.

உயிர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடாது என்று சின்னக் குழந்தைக்கு எப்படிச் சொல்லித்தருவது என்று விவாதம் வந்தபோது, 'அது செடிப் பாப்பா, உனக்குக் கிள்ளினா வலிக்கிற மாதிரி, செடியோட இலையைப் பிச்சுப்போட்டா அதுக்கும் வலிக்கும்' என்று சொல்லித் தருவதாகக் கூறினார் நண்பர் ஒருவர். செடிகள் எல்லாம் பாப்பாக்கள் என்றால், மரங்கள் எல்லாமே தாத்தா, பாட்டிகள், நமது மூதாதையர்கள். அவர்களை நாம்தானே கவனித்துக்கொள்ள வேண்டும்!

(ம.மலர் மார்ச் 1 - 15, 2021 இதழிலிருந்து தொகுப்பு)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com