
நம் ஊரில் வாழும் சாதாரணத் தவளைகளை பார்த்திருப்போம். இவைகள் சுற்றுச்சூழல் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அறிவோம். ஆனால் உருவத்திலும் செயலிலும் திகில் தரும் ஹேரி தவளை பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது, தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
திகில் தவளை, முடித் தவளை அல்லது வால்வரின் தவளை என்றெல்லாம் அழைக்கப்படும் ஹேரி தவளை (Hairy Frog), ஆர்த்ரோலெப்டிடே குடும்பத்தைச் சேர்ந்த மத்திய ஆப்பிரிக்க தவளை இனமாகும். இத் தவளைகள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக கேமரூன் காடுகள், காங்கோ நாடு, நைஜீரியாவின் வெப்பமண்டல மத்திய ஆப்பிரிக்கா, மற்றும் கினியா காடுகளில் அதிகம் காணலாம்.
இந்த தவளைகள் பொதுவாக வேகமாக ஓடும் ஆறுகள், ஓடைகள் மற்றும் ஈரப்பதமான காட்டுச் சூழல்கள் உள்ள பகுதிகளில் வசிக்கின்றன, அங்கு அவை இலைக் குப்பைகள், தாவரங்கள் அல்லது கிளைகளில் அமர்ந்திருக்கும். இனப்பெருக்க காலத்தில், ஆண் தவளைகள் முடி போன்ற நீட்டிப்புகளை உருவாக்கி, நீரோடைகளில் முட்டைகளை கவனித்துக்கொள்கின்றன
இவ்வகை தவளைகள் முதிர்ந்த தவளைகள் நத்தைகள், மிரியாபோட்கள், சிலந்திகள், வண்டுகள் மற்றும் வெட்டுக்கிளிகளை உணவாக உட்கொள்ளும். தற்காப்புக்காகப் பயன்படுத்தக்கூடிய உள்ளிழுக்கும் "நகங்கள்" மற்றும் அதன் பக்கவாட்டு மற்றும் தொடைகளில் முடி போன்ற கட்டமைப்புகள் இதன் சிறப்பு.
வேட்டையாடுபவர்களைத் தடுக்க இந்த நகங்களை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. பிற தவளைகள் மற்றும் விலங்குகளால் அச்சுறுத்தப்படும்போது அதைத் தடுக்கும் விதமாக, ஹேரி தவளை வேண்டுமென்றே அதன் கால் விரல்களில் உள்ள எலும்புகளை உடைத்து, பூனை போன்ற கூர்மையான நகங்களை அதன் தோலின் வழியாகத் தள்ளும் . இதன் மூலம் எதிரியின் உடலில் குத்தி தன்னைப் பாதுகாக்கும் திறனுடையது. இதன் காரணமாகவே திகில் தவளை என அறியப்படுகிறது.
இனப்பெருக்க காலத்தில் ஆண் தவளைகளே முட்டைகளை அடைகாத்து, அவற்றை தீங்குகளிலிருந்து பாதுகாக்கின்றன. அப்போது தங்கள் பக்கவாட்டு மற்றும் தொடைகளில் முடி போன்ற பாப்பிலாக்களை உருவாக்குகின்றன. இந்த கட்டமைப்புகள் தோல் வழியாக வாயு பரிமாற்றத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது, இதனால் ஆண் தவளைகள் முட்டைகளைப் பராமரிக்கும் போது சிரமமின்றி சுவாசிக்க ஏதுவாகிறது. மேலும் தங்கள் முட்டைகளை இந்த முடிகளில் சுற்றி அடைகாப்பதிலும் பங்கு வகிக்கிறது.
ஹேரி தவளைகள் சரும சுவாசத்தை பெரிதும் நம்பியுள்ளன. அதாவது நுரையீரலைப் பயன்படுத்துவதோடு கூடுதலாக, அவற்றின் தோல் வழியாகவும் சுவாசிக்கின்றன. முடி போன்ற கட்டமைப்புகள் தோல் வழியாக வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்புப் பகுதியை மேலும் அதிகரிக்கின்றன. உலகளவில் அறியப்பட்ட 6500 இனங்களில் உண்மையான நகங்களைக் கொண்ட ஒரே தவளை முடி தவளை மட்டுமே என சொல்லப்படுகிறது.
முடியுள்ள தவளைகளின் சிறப்புகள், அவற்றின் நடத்தை, உடலியல் மற்றும் சூழலியல் ஆகியவற்றைப் படிப்பதில் உலகளவில் விஞ்ஞானிகள் ஆர்வத்தை காட்டுகின்றனர். இத்தகைய சிறப்புகள் இருந்தாலும் ஹேரி தவளைகள் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, இது அவற்றின் இனப்பெருக்கத்தை பாதிக்கலாம்.