தோட்டக்கலைப் பிரியரா நீங்கள்? இந்த 5 குறிப்புகள் உங்களுக்குத் தான்!

5 Tips!
Horticulture Crops
Published on

விவசாயத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் தோட்டக்கலைப் பயிர்கள், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் சாகுபடி வாய்ப்பை வழங்குகின்றன. இன்றைய சூழலில் விளைபொருள்களின் தேவை அதிகம் என்பதால், தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்வது மிக எளிதாக இருக்கும். அதேநேரம் தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டு, விவசாயத்திற்குள் நுழையும் புதிய தலைமுறையினருக்கு பல கேள்விகள் மனதில் எழும். இவர்களுக்கு உதவுவதற்காகவே தோட்டக்கலை குறித்த முக்கியமான 5 குறிப்புகளை இங்கே அளிக்கிறோம்.

கீரைகள், காய்கறிகள், பூச்செடிகள், பழங்கள், காளான் மற்றும் அலங்காரச் செடிகளைத் தோட்டக்கலைப் பயிர்கள் என்றழைக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் இதில் பல செடிகளை பலரும் வீட்டிலேயே வளர்த்து வருகின்றனர். அதிலும் மாடித்தோட்டம் வந்தபின், தோட்டக்கலைத் துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவ்வகையில் நீங்கள் வீட்டிலேயே தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்தாலும் சரி அல்லது பெரிய அளவில் சாகுபடி செய்தாலும் சரி, இந்த குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

1. முதலில் உங்கள் பகுதியின் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் கடினத்தன்மையை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மண்ணின் தன்மைக்கு எந்தெந்த தாவரங்கள் நன்றாக வளர்கிறது மற்றும் வளராத தாவரங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை எந்த காலத்தில் விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

2. உங்களுடைய நிலத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறையேனும் அழுகிய மற்றும் மட்கிய உரங்களை இட வேண்டும். புதிய உரங்களில் நைட்ரஜன் அதிகளவில் இருக்கும். இதில் ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்க்கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புள்ளதால், இது தாவர வளர்ச்சியை பாதிக்கும். நாய்கள், பன்றிகள் மற்றும் பூனைகளின் எருக்களில் மனிதர்களை பாதிக்கும் ஒட்டுண்ணிகள் இருப்பதால், இவற்றை எப்போதும் பயன்படுத்தக் கூடாது.

3. செடிகளில் எப்போது கவாத்து செய்ய வேண்டும் என்று சிலருக்கு தெரியவில்லை. பொதுவாக பூக்கள் பூப்பதற்கு முன்பாகவே கவாத்து செய்து விட்டால், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதன்மூலம் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. வாடிய மற்றும் காய்ந்த இலைகளை முதலில் கத்தரிக்க வேண்டும். பூ மொட்டுகள் துளிர் விடும் தருணத்தில் கவாத்து செய்ய நினைத்தால், மொட்டுகளில் சேதம் ஏற்படாதவாறு தேவையற்ற இலைகள் மற்றும் கொப்புகளை கவாத்து செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே! விதை உற்பத்தி செய்யும் வழிமுறை தெரியுமா?
5 Tips!

4. சில தாவரங்கள் வற்றாமல் இருக்கும். அதேநேரம் அறுவடைக்குப் தயாராகாமல் கூட இருக்கும். இம்மாதிரியான தாவரங்கள் முதிர்ச்சியடைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆகையால் இவற்றில் வளர்ச்சியே இல்லை என நினைத்து விடக் கூடாது. இந்நேரத்தில் தான் பொறுமை காக்க வேண்டும். மேலும் காலை நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. அப்போது தான் ஈரப்பதம் வெகு நேரத்திற்கு நீடித்திருக்கும்.

5. நீங்கள் விதைத்திருக்கும் தாவரங்களின் சிறப்பு, வளரும் பருவம், காய் கனிகளைக் கொடுக்கும் காலம் என அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிர்கள் பெரும்பாலும் குறுகிய காலப் பயிர்களாக இருப்பதால், விரைவிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இருப்பினும் ஒவ்வொரு தாவரத்தின் வளரும் பருவ காலம் மிகவும் முக்கியமானது. இந்நேரத்தில் செடியில் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com