காற்று மாசுபாட்டால் எப்படி கேன்சர் வருகிறது தெரியுமா?

How air pollution causes cancer?
How air pollution causes cancer?

நாம் சுவாசிக்கும் காற்று வாழ்வதற்கு இன்றியமையாதது. ஆனால், உலகின் பல பகுதிகளில் சுவாசம் வழியாக நம்மை கொல்ல அமைதியான கொலையாளி ஒருவன் உருவாகிவிட்டான். அவன்தான் 'காற்று மாசுபாடு.' இது வளர்ந்து வரும் உலகில் மனித ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. காற்று மாசுபாட்டால் நம் சுவாச அமைப்புக்கு தீங்கு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதனால் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளதென்பது உங்களுக்குத் தெரியுமா?

காற்றில் கலக்கும் கொலையாளிகள்: காற்று மாசுபாடு என்பது நுண்ணிய துகள்கள், நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் மோனாக்சைடு மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் உட்பட பல்வேறு வாயுக்கள் மற்றும் துகள்களின் கலவையாகும். இத்தகைய கொலைக்காரணிகள் அனைத்தும் தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் மற்றும் காட்டு தீ போன்றவற்றிலிருந்தும் வெளியேறுகின்றன. இவை வளிமண்டல காற்றுடன் சேர்வதால் நமது நுரையீரலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபாட்டுக்கும் புற்று நோய்க்கும் என்ன தொடர்பு?:  இதுவரை செய்த பல ஆய்வுகளில் காற்று மாசுபாட்டுக்கும் புற்று நோய்க்கும் இடையே தொடர்பு உள்ளதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஓர் அங்கமான புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் பல வாயுக்களும், துகள்களும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என வகைப்படுத்தியுள்ளது.

பென்சீன்: இந்த பென்சீன் கலவையானது, பெட்ரோல் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகிறது. இதனால் இரத்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பென்சீன் அதிகமாக பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதன் தாக்கம் இருக்கிறதாம்.

ஃபார்மாலிட்டிஹைட்: காற்றில் பரவும் மற்றொரு மிகப்பெரிய கொலையாளி ஃபார்மாலிட்டிஹைட். இதனால் காற்றுக் குழாய் புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

நுண்ணிய துகள்கள்: 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய துகள்களால், சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்ல முடியும். இவை நீண்ட காலம் நம் நுரையீரலில் தங்குவதால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்: இது புதைப் படிவ எரிபொருட்கள், மரம் மற்றும் பிற கரிமப் பொருட்களிலிருந்து வெளியேறுகிறது. இது நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்று நோய்களுடன் தொடர்புடையதாகும்.

இத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் கலவைகள் காற்றில் கலந்து, அதை மனிதர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காற்று மாசுபாட்டை சாதாரணமாக நினைக்காமல், இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இதைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com