மழை இறங்கினால் குடை ஏறும்! சரி, பட்டர் பேப்பர் குடை தெரியுமா?

Umbrella
Umbrella
Published on

மழைக்காலம் வந்தாலே நாம் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ளும் ஒரு விஷயம் – குடை. ஆனால் வீழும் மழை நீர் நம் தலைமீது இறங்காதபடி காக்கும் அந்தக் குடையை எடுத்துச் செல்லும் நாம், போகுமிடம் அடைந்ததும், திரும்ப வரும்போது மழை இல்லை என்றால், கொஞ்சமும் நன்றியே இல்லாமல் போன இடத்திலேயே அதை விட்டுவிட்டு வரும் ஞாபக மறதியையும் கொண்டிருக்கிறோம்!

சரி, இந்தக் குடை எப்படி நம் கைக்கு வந்தது? 

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே…. என்று பார்த்தோமானால், 4000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சீனர்களால் வெயில் தகிப்பிலிருந்து தப்ப, தலைக்கு மேலே ஒரு சிறு நிழற் பந்தலாக இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் திருமணத்தின்போது மணமகன், மணமகள் இருவரையும் சிவப்பு வண்ண குடையால் மூடுவது ஒரு சம்பிரதாயம். இதனால் அவர்கள் மீது எந்த திருஷ்டியும் விழாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.

பெரியவர்களுக்கு இதேபோன்ற ஆனால் ஊதா நிற குடைகளை அன்பளிப்பாக வழங்கினார்கள் – அது அவர்களுடைய ஆயுளை நீட்டிக்குமாம். வெள்ளை நிறக் குடைகளை இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தினார்கள்.

அந்த காலகட்டத்தில் பட்டர் பேப்பர் எனப்பட்ட நீர்த்துளிகள் பட்டாலும் ஒட்டாமல் வழிந்து ஓடிவிடக்கூடியதான வழுவழுப்பு பேப்பரில் குடைகள் தயாரிக்கப்பட்டன. அல்லது சாதாரண பேப்பரின் மீது மரப்பிசின் அல்லது மெழுகு தடவப்பட்டிருந்தது. அதாவது கோடை வெயில் மட்டுமல்லாமல், மாரி மழையிலிருந்தும் தப்பிக்கும் உத்தி! இந்த பட்டர் பேப்பர் குடை, இன்று அரும்பொருட் காட்சிசாலையில் ஓர் அங்கமாக விளங்குகிறது. 

சீன மொழியில் என்னவாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், லத்தீன் மொழிதான் ‘அம்ப்ரல்லா‘ என்று குடையை அழைத்தது. ‘அம்ப்ரா‘ என்றால் நிழல். இதேபோல ப்ரெஞ்சு மொழியில் Parapluie  என்றால் பாதுகாப்பு சாதனம், அதாவது குடை என்று அர்த்தம்.

1700 வாக்கில் இங்கிலாந்தில் ஜோனஸ் ஹாங்வே என்பவர் ஒரு நீண்ட மூங்கில் கழி, அதனுடன் இணைக்கப்பட்ட மெலிதான சில மூங்கில் குச்சிகள், இவற்றோடு தையலால் பிணைக்கப்பட்ட மேல் துணி, இணைப்புக் குச்சிகளை மேலும், கீழுமாக இயக்க, கைப்பிடி அருகே சிறு மூங்கில் உருளை என்றெல்லாம் வைத்து குடையைத் தயாரித்துப் பயன்படுத்தினார். அந்த உருளையை மேலே உயர்த்தினால் அரை வட்ட வடிவில் குடைத் துணி விரியும்; உருளையைக் கீழே இறக்கினால் மடிந்து ஒடுங்கிவிடும். 

ஆரம்பத்தில் எடை மிகுந்ததாகவும் எடுத்துச் செல்ல சிரமமாகவும் இருந்ததால், புதுப்புது உத்திகள் கையாளப்பட்டன. ஆமாம், 1800 வாக்கில் இந்தக் குடை திமிங்கில எலும்புகளாலும், மால்பெரி மரப் பட்டைகளாலும் தயாரிக்கப்பட்டு, ஐந்து கிலோகிராம் எடை கொண்டதாகவும் இருந்திருக்கிறது! இந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக நவீனப்பட்டு இப்போதைய மடக்குக் குடை என்ற அளவில் அவை தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
காலை வேளையில் பறவைகள் ஒலி எழுப்புவதற்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா? 
Umbrella

இந்தியாவைப் பொறுத்தவரை மழைநீரிலிருந்து காத்துக் கொள்ள கோணிப்பை அல்லது கனமான போர்வையைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் மட்டுமன்றி, நாலைந்து பேர் இந்தக் ‘குடை‘யின் கீழ் பாதுகாப்பாகச் செல்லலாம். ஆனால் இந்த கோணி மற்றும் போர்வை காய்வதற்குப் பல நாட்கள் ஆகும்! சில இடங்களில் பனை ஓலையைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

கேரளத்தில் ஓர் அடி நீளக் கைப்பிடியுடன், மூன்றடி விட்டமுள்ள மரக் குடைகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. 

கறுப்பு நிறத் துணியால் ஆன, சுமார் மூன்றடி நீளமுள்ள குடையை ஆண்கள் பயன்படுத்த, அதில் பாதி அளவில் மென்மையான துணி அல்லது பாலிதின் ஷீட்டால் உருவான குடையைப் பெண்கள் பயன்படுத்தினார்கள். இந்தச் சிறிய உருவத்தை வைத்துதான் ‘லேடீஸ் குடை மழைக்கு உதவாது‘ என்றெல்லாம் கிண்டலடித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
வயதான பின்பும் மீண்டும் இளமைக்குத் திரும்பும் அதிசய உயிரினம்!
Umbrella

இப்போது தலையிலிருந்து பாதி உடல்வரை மறைக்கும் டிரான்ஸ்பரன்ட் குடைகளும் வந்துவிட்டன. குழந்தைகளைக் கவரும் வகையில் பல டிசைன்களில், வண்ண ஓவியங்களுடன் குடைகள் தயாராகின்றன. 

அட, மழை வருதே, குடை எடுத்துகிட்டுப் போறீங்களா, மறக்காமல் திரும்பக் கொண்டு வந்திடுங்க, சரியா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com