

இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. ஆனால், அது ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவற்றில் கடுமையான மாசுபாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.
ஜவுளி, இரசாயனங்கள், காகிதம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள்; கன உலோகங்கள், சாயங்கள், நச்சு இரசாயனங்கள் அடங்கிய சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றுகின்றன. இந்த மாசுபாடு சுற்றுச்சூழல் அமைப்புகளை சீரழிப்பது மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக ஆற்றுப் படுகைகளின் ஓரமாகத் இயங்கும் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அரசாங்கம் இதற்கு என்ன சொல்கிறது?
இதைக் கையாள்வதற்காக இந்தியா 1974ஆம் ஆண்டின் நீருக்கான (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தை இயற்றியது. இது பின்னர் 1988, 2024ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்களால் வலுப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மற்றும் மாநில வாரியங்களை உருவாக்கியது. இவை தொழிற்சாலைக் கழிவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றன.
தொழிற்சாலைகள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு முன்பு ‘செயல்படுவதற்கான அனுமதியை’ (Consent to Operate) பெற வேண்டும். இதை மீறினால் அபராதம், மூடுவதற்கான உத்தரவுகள் அல்லது வழக்குத் தொடரலுக்கு வழிவகுக்கும்.
அதோடு 1977ஆம் ஆண்டின் நீர் வரிச் சட்டம் படி (Water Cess Act), நீரைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் கட்டணங்களை வசூலிக்கவும், இன்னொரு புறம் அவர்கள் நீரை சேமிக்கவும் ஊக்குவிக்கிறது. ஆனால், சமீபத்திய விதிகள் (2024–2025) அபராதக் கட்டமைப்புகளையும், சில ஆலைகளுக்கு விலக்குகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் தொழில்துறை வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியைக் காட்டுகிறது.
குடிமக்களிடம் உள்ள அதிகாரங்கள்:
தொழிற்சாலைகள் அரசாங்க விதிகளைப் புறக்கணித்தால், நீதிமன்ற மனுக்கள், ஊடக அழுத்தம், கூட்டுச் செயல்பாடுகள் மூலம் குடிமக்கள் அதை தட்டிக் கேட்கலாம்.
காரணம் மாசுபாட்டைத் தடுக்க சில அவசரக் கால நடவடிக்கைகளை அமல்படுத்த வாரியங்களுக்குச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. கண்ணில்படும் விதிமீறல்களைப் புகாரளிப்பதன் மூலம் குடிமக்கள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
விதிமீறல்கள் நடப்பதாகச் சந்தேகித்தால், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அல்லது CPCB-யிடம் புகார்களைப் பதிவு செய்யலாம்.
தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கவும் தேவையான இழப்பீடு பெற்றுத் தரவும் அதிகாரம் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை (NGT) அணுகலாம்.
தொழிற்சாலைகளின் மாசு தரவுகள் குறித்த வெளிப்படைத்தன்மையைப் பெற, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் (RTI) பயன்படுத்தலாம்.
புதிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளின்போது (Environmental Impact Assessments) நடைபெறும் பொது விசாரணைகளில் பங்கேற்கலாம்.
தொழிற்சாலைகள் இல்லாத நாடுகள் உள்ளதா?:
இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை மற்றும் புவியியலைக் கொண்ட நாடுகள் தொழிற்சாலைகளைத் முற்றிலும் தடை செய்யவில்லை; ஆனால் அந்த நாடுகள் கடுமையான சட்டங்களை அமல்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவைவிட கடுமையான தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுகிறது. சீனா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் (Renewable energy) முதலீடு செய்துகொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாசுபடுத்தும் தொழிற்சாலைகளையும் மூடியுள்ளது.
அமெரிக்கா தூய்மையான காற்று மற்றும் நீர் சட்டங்கள் மூலம் வலுவான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பூட்டான், கோஸ்டாரிகா போன்ற சிறிய நாடுகள் கனரகத் தொழில்களைக் கட்டுப்படுத்தி அதற்குப் பதிலாக; சுற்றுலா, நீர்மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் ஆகியவற்றில் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கையாளுகின்றன.