
விவசாயத்தின் முக்கியப் பயிர்களில் கீரையும் ஒன்று. குறுகிய காலப் பயிரான கீரை சாகுபடியில் விவசாயிகளால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கீரையில் அரைக் கீரை, சிறு கீரை மற்றும் தண்டு கீரை என பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் சத்து மிகுந்தவை என்பதால் தினந்தோறும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தற்போது தண்டு கீரை சாகுபடி குறித்த விவரங்களை பார்ப்போம்.
பொதுவாக அனைத்து வகையான கீரைகளும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும் தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கீரை சாகுபடிக்கு ஏற்றது. வெப்பமான பகுதிகளில் மட்டுமின்றி குளிர்ச்சியான பகுதிகளிலும் கீரைகளை வளர்க்க முடியும். ஒரு ஹெக்டேருக்கு கீரை சாகுபடி செய்ய சுமார் 2.5 கிலோகிராம் விதைகள் தேவைப்படும். கீரை விதைகளை வாங்கும் போது நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியம்.
விதைத்தல்: கீரை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு முன்பு முதலில் நிலத்தை தயார் செய்வது முக்கியம். நிலத்தில் கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கீரைகளை விடவும் தண்டு கீரை கொஞ்சம் உயரமாக வளரும். ஆகையால் விதைகளை விதைக்கும் போது ஒன்றரை மீட்டர் இடைவெளி விட வேண்டும்.
தண்ணீர்ப் பாய்ச்சு: விதைப்பதற்கு முன்பும், விதைத்த பின்னரும் நிலத்தில் சீராக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். குறிப்பாக காலையில் எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் தண்ணீரைப் பாய்ச்சலாம். அப்போது தான் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும்.
உரமிடுதல்: உரமிடும் போது ஒரு ஹெக்டேருக்கு கிட்டத்தட்ட 25 டன் தொழு உரத்தையும், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா மற்றும் 2 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகிய உரங்களை இட வேண்டும். இதுதவிர 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 50 கிலோ மணிச்சத்தை நிலத்தில் அடியுரமாக இடலாம்.
பூச்சி மேலாண்மை: இலைப்புள்ளி நோய் மற்றும் இலைத்தின்னிப் புழு ஆகியவற்றின் தாக்குதல் கீரை சாகுபடியில் அதிகமாக இருக்கும். இதில் இலைப்புள்ளி நோய் கீரைகளைத் தாக்கினால் 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கார்பெண்டாசிமைக் கலந்து தெளிக்கலாம். கீரைகளுக்கு சல்பர் கலந்த மருந்துகளைத் தெளிக்கவே கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இலைகளை அதிகளவில் தாக்கும் இலைத்தின்னிப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு நவலூரான் 10 இ.சி. மருந்தை 75 கிராம் வரைத் தெளிக்கலாம்.
அறுவடை: தண்டு கீரை 35 முதல் 40 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். இந்த நேரத்தில் தண்டு கீரைகளை வேருடன் பிடுங்கி, சந்தையில் விற்கத் தொடங்கலாம். முடிந்த அளவிற்கு நேரடியாக கீரைகளை விற்க விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டாம். அப்போது தான் நல்ல இலாபம் கிடைக்கும். அப்படி முடியவில்லை என்றால் குறைந்த அளவு கீரைகளையாவது விற்பனை செய்ய முயற்சியுங்கள்.
உற்பத்தி செய்து இடைத்தரகரிடம் விற்பனை செய்வதை விட, நேரடி வணிகத்தில் இறங்கினால் அதிக இலாபத்தைப் பெற முடியும். நேரமின்மை மற்றும் போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் விவசாயிகள் பலரும் விற்பனையைத் தவிர்க்கின்றனர். இருப்பினும் விற்பனையிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.