விவசாயிகள் எதிர் கொள்ளக்கூடிய மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பூச்சி தாக்குதல். பூச்சி தாக்குதலை சமாளிக்க ரசாயன மருந்துகள், செயற்கை மருந்துகளை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் விளைப் பொருட்கள் பாதிக்கப்படுவதும், இதை சாப்பிடும் மனிதர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துவதும் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் விவசாயிகள் செயற்கையான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கைக்கு ஏற்றவாறு, இயற்கையினாலான பூச்சிக்கொல்லிகளை உருவாக்கி பயன்படுத்தினால் செலவு குறைவதோடு அதிக அளவிலான விளைச்சல் மற்றும் மண் தரம் பாதிக்காமல் ஆரோக்கியமான விளைப் பொருட்களை பெற முடியும்.
மூலிகைப் பூச்சிவிரட்டி கரைசல், இதற்கு வேப்பிலை, கற்றாழை, எருக்கன் இலை, தும்பை இலை, நொச்சி இலை ஆகியவற்றை தலா 2 கிலோ அளவுக்கு எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொண்டு அவற்றுடன், அவை மூழ்கும் அளவுக்குப் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி 3 நாள்கள் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விளைநிலங்களில் தெளித்து பயன்படுத்தினால் பூச்சி தாக்குதல் பெருமளவில் குறையும்.
பூண்டுக் கரைசல், இதைத் தயாரிக்க 300 கிராம் பூண்டை இடித்து, 150 மில்லி லிட்டர் மண்ணெண்ணெயை 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை 60 லிட்டர் நீரில் சேர்த்து, ஒரு ஏக்கர் அளவுக்குத் தெளிக்கலாம்.
வேப்பங் கொட்டைச் சாறு மிகச்சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாக விளங்குகிறது. இதை தயாரிக்க 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து, மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினைப் பிழிந்து எடுத்து வடிகட்டி 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் 100 மில்லி லிட்டர் காதிசோப்புக் கரைசலை அதனுடன் சேர்த்தும் கலந்து பயன்படுத்தலாம். இது விளைநிலங்களில் உலாவும் பல்வேறு வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
பெருங்காய கரைசல், இதைத் தயாரிக்க ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு நீர்ப்பாசனம் இருக்கும் கால்வாயில் போட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்குச் செல்லும். இந்த முறையால் பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைக்கும்.