மழைக்கால கால்நடைகள் பாதுகாப்பு: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!

மழைக்கால கால்நடைகள் பாதுகாப்பு: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!

ழைக்காலம் தொடங்கி விட்டதால், கால்நடைகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு வேளாண் துறை தெரிவித்துள்ளது. விவசாயிகளின் இணைத் தொழில்களில் ஒன்று கால்நடை வளர்ப்பு. விவசாயத்துக்கு இணையான மாற்றுத் தொழிலாகவும் இது கருதப்படுகிறது. இதனால் பலரும் ஆடு, மாடு, கோழிகளை வீடுகளில் அல்லது அதற்கான இடங்களில் வைத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கால்நடைகளை வளர்ப்பவர்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் கவனத்தோடு செயல்பட வேண்டும். காரணம், இந்த குறிப்பிட்ட காலங்களில் கால்நடைகளுக்கு நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், ஈரப்பதமான இடங்களில் கால்நடைகளை மேய வைப்பது, அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நீர் படாமல் உலர்ந்த புல் வகைகளை மட்டும் கால்நடைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும். தீவனங்களை பாலித்தீன் கவர்களில் சுற்றி பண்ணை அமைத்து பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான நீரை கால்நடைகள் பருகுவதன் மூலம் நோய் தொற்றின் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் அதிகம் குளிர்ச்சி இல்லாத நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.

மேலும், மழை மற்றும் குளிர்காலங்களில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த காலை மற்றும் மாலை வேலைகளில் மூட்டம் போட்டு வைப்பது நல்ல நடவடிக்கையாக இருக்கும். மாடுகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் பெரியம்மை நோய் அலர்ஜி, வாய்க்காணை போன்ற நோய்கள் அதிகம் ஏற்படக்கூடும். மழைக்காலம் தொடங்கும் முன்பே இதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது. ஆடுகளுக்கு பிபிஆர் மற்றும் துள்ளு மாரி நோய் தடுப்பூசி, நீல நாக்கு நோய் தடுப்பூசி, வாய்க்காணை தடுப்பூசி போன்றவை செலுத்த வேண்டும். கோழிகளுக்கு காய்ச்சல் தடுப்பூசியை இறகுகளில் செலுத்த வேண்டும். இவை மட்டுமின்றி, கால்நடைகளுக்கான முதல் உதவி பெட்டியில் அனைத்து மருந்துகளையும் எப்போதும் கையிருப்பு வைத்துக் கொள்வது நல்லது.

கன்றுகள் மற்றும் குஞ்சுகளைப் பாதுகாக்க தென்னை நார், உமி போன்றவற்றைக் கொண்டு மெத்தை அமைத்தால் கதகதப்பான சூழல் ஏற்படும். மேலும், வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறையின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com