செயற்கை உரப் பயன்பாட்டால், மண்ணின் வளம் குன்றி மலடாகி விட்டதே என வேதனைப்படும் விவசாயிகளே! உங்கள் நிலத்தை மீண்டும் உயிர்ப்பித்திட இயற்கையான வழிமுறைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
விவசாயத் தொழிலுக்கு இணையான தொழில் வேறொன்று இல்லை. உலகம் முழுக்க மனிதர்கள் விவசாயத்தைச் சார்ந்துள்ள நிலையில், செயற்கை உரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே மண்ணின் வளம் குன்றி, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதனை இயற்கையாக சரிசெய்யும் நடைமுறைகளை விவசாயிகள் தெரிந்து கொள்வது நல்லது.
இயற்கை உரங்களின் அருமையை உணர்ந்த சில விவசாயிகள், இயற்கையின் பக்கம் திரும்பியுள்ளனர். இயற்கை உரங்களை மிகச் சரியாக பயன்படுத்தினால், மகசூல் அதிகரிப்பதோடு மண் வளமும் மேம்படும். இயற்கை உரங்களின் மீதான விழிப்புணர்வு குறைந்ததும், செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்ததுமே மண்ணின் மலட்டுத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப செயற்கை உரங்கள் அதிகளவில் மிக எளிதாக கிடைக்கின்றன. செயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகளின் மனதில் ஆழப் பதித்து விட்டனர். ஆனால் மண்வளம் பாதிக்கும் என்ற உண்மையை மறைத்து விட்டனர்.
மண் வளம்:
மண்ணின் வளம் தான் விவசாயத்திற்கு அடிப்படை. வளமையான மண்ணில் 25% காற்றும், 5-10% சிறு உயிரினங்களும், இறந்த உயிரினங்களும் இருக்க வேண்டும். மண்ணில் கரிமச் சத்தான கார்பன் 0.8% முதல் 1.3% வரை இருந்தால் தான் நல்ல பலனை அளிக்கும். இதன் அளவு குறைந்தால், மகசூலும் குறைந்து விடும். 1971 ஆம் ஆண்டில் 1.2% ஆக இருந்த மண்ணின் வளம், கடந்த 2002 ஆம் ஆண்டில் 0.68% ஆக குறைந்து விட்டது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மண் வளத்தைப் பெருக்குதல்: ஏழு முறை உழவு செய்தால் எரு போடத் தேவையில்லை என்ற முன்னோர்களின் சொல்படி, கோடை உழவு முதல் தொடர்ந்து விதைக்க வேண்டும். இதன் மூலம் மண் வளம் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். ஆடு, மாடுகளை நிலத்தில் மேய விட்டு, கிடை போடுவதன் மூலமும் நிலத்தை மேம்படுத்தலாம். மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிடுவது மற்றும் சத்து மிகுந்த தொழு உரத்தை இடுவது மிகச் சிறந்த பலனைத் தரும். ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதைக் காட்டிலும், பயிர் சுழற்சி முறையைக் கடைபிடிக்கலாம். மேலும், ஒரே நேரத்தில் பலதானியப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுவதன் மூலமும் மண் வளத்தை மேம்படுத்த முடியும். வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அரசு அனுமதி தரும் நேரங்களில், செம்மண் நிலத்தில் கரிசல் மண்ணையும், கரிசல் மண் நிலத்தில் செம்மண்ணையும் நிரப்பலாம்.
மேற்கண்ட வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இழந்த மண் வளத்தை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். மண்வளம் குன்றிய பிறகும், மீட்டெடுத்த பிறகும் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் கூடாது.