முருங்கை மரத்தில் கம்பளி பூச்சியா? என்ன செய்யலாம்?

முருங்கை மரத்தில் கம்பளி பூச்சியா? என்ன செய்யலாம்?
Published on

முருங்கை இலை, பூ, பிஞ்சு, முருங்கைக்காய், விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையவை. முருங்கைக்கீரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமை தரும். இரத்த விருத்தியை அதிகரிக்கும். மேலும், கண் பார்வை கோளாறுகளை சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு. வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருள் இது. இதன் இலையை காய வைத்து வெந்நீரில் போட்டு வடித்து தேன் சேர்த்து பருகலாம். இவை அனைவரும் அறிந்ததுதான்.

இன்னும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது முருங்கை மரத்தை பராமரிக்கும் முறையைப் பற்றித்தான். இதில் அதைக் காண்போம்!

* முருங்கை மரத்தை அவ்வப்போது அதன் கிளைகள் பரவும்பொழுதே முறித்துவிட்டு, சீர்படுத்தி வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் கிளைகள் உறுதி பெறும். மேலும், மின் கம்பங்கள் அருகில் இருந்தால் கிளைகள் அதன் மீது படர்வதைத் தடுக்கலாம்.

* முருங்கை மரம் காய்க்க ஆரம்பிக்கும்போது மரத்தின் அடியில் பெருங்காயத்தை புதைத்து விட்டால், காய்க்காத மரம் நன்றாகக் காய்க்க ஆரம்பிக்கும். காய்ப்பதுவும் அதிகமாக இருக்கும்.

* எப்படித்தான் அதை நன்றாக கவனித்து வந்தாலும், கம்பளிப் பூச்சிகள் அதன் கிளைகளில் படிந்து படையாக இருக்கும். அதற்கு சோப்பு கலந்த தண்ணீரை அதன் மீது ஊற்றி அவற்றை அழித்து விட வேண்டும்.

* அது மழையில் தானாக அழிந்து விடும் என்று விட்டுவிட்டோமானால், அந்த கம்பளிப் பூச்சி இருக்கும்பொழுது காய் விடும் பிஞ்சுகளில் எல்லாம் ஒரு விதமான ஈ உட்கார ஆரம்பிக்கும். அதனுடன் சின்ன வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான் போன்றவைகளும் அதில் உட்கார்ந்து முருங்கைக்காயின் உள்ளிருக்கும் ஜூசை உறிஞ்ச ஆரம்பிக்கும். ஒரு ஓரத்தில்தானே உறிஞ்சுகிறது என்று பார்த்தால் காய் முழுவதுமே வீணாகி இருக்கும். அதை சமைக்க முடியாது.

* அப்படியே விட்டுவிட்டால் மரத்தில் இருக்கும் எல்லா காய்களிலும் அந்த ஈ உட்காரும். அதை போக்குவது மிகக் கடினம். முருங்கைக்காய் அவ்வளவும் அழித்து விடும். பிறகு மரத்தில் முருங்கை பிஞ்சு முதல் முற்றிய காய்கள் அனைத்தும் காய்ந்து போய் பட்டையாகத்தான் தொங்கும்.

* ஆதலால், கம்பளிப் பூச்சிகளை அலட்சியமாக எண்ணி அதுவாக வெயிலில் காய்ந்து அழிந்து விடும் என்றோ, மழையில் தானாக அழிந்துவிடும் என்றோ இருந்து விடாதீர்கள். சோப்பு தண்ணீரை பீய்ச்சி அடித்து அல்லது அவற்றின் மேல் நெருப்பைக் காட்டி அழித்துவிட வேண்டும்.

* மேலும், பால்கனிக்கு அருகில் முருங்கைக்கிளைகள் வந்தால் அவற்றை பறிப்பதற்கு வசதியாக இருக்கிறது என்று விட்டு வைக்காதீர்கள். அதில் கம்பளிப் பூச்சிகள் ஏறி அதன் அருகில் காய வைத்திருக்கும் துணிகளிலும் வந்து விடும். அதனால் பால்கனியை ஒட்டி இருக்கும் கிளைகளை வெட்டி விடுவது மிக மிக அவசியம். இல்லையேல் அந்தப் பகுதிகளில் துணி காய போடுவதை நிறுத்தி விட வேண்டும்.

முருங்கை மர பராமரிப்புக்கு நாம் அதிகமாக மெனக்கிட வேண்டியதில்லை என்றாலும், அதில் கம்பளிப் பூச்சிகள் வந்தால் கவனமாக கையாள வேண்டியது அவசியம் ஆகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com