‘லியோ’ படத்தில் வரும் கழுதை புலிகள் பற்றி தெரியுமா?

Hyena In Leo Movie.
Hyena In Leo Movie.
Published on

மீபத்தில் வெளியான, ‘லியோ’ படத்தில் ‘ஹைனா’ எனப்படும் கழுதைப்புலியுடன் நடிகர் விஜய் சண்டையிடும் காட்சியை பார்த்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தில் ஹைனாவை குறியீட்டு விலங்காகப் பயன்படுத்தி இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றின் சிறப்புமிக்க குணநலன்களே, காடுகளில் முற்றிலும் வித்தியாசமான விலங்குகளாக இவற்றை வைத்துள்ளது.

காட்டில் ராஜாக்களாக வாழும் சிங்கங்கள், ஒரு கோட்டையைப் போல அணிவகுத்துச் செல்லும் யானைகள், அழகிய ஓசை எழுப்பும் பறவைகள், விலங்குகளுக்கு மத்தியில், தந்திரமான சிரிப்புடன் காடுகளை அலங்கரிக்கும் ஹைனாக்கள் கொண்ட ஆப்பிரிக்க வனப்பகுதியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த விலங்குகளின் அச்சுறுத்தும் தன்மை, மோசமான செய்கைகளைக் கொண்டு மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விலங்கினங்களில் ஹைனாவும் ஒன்று.

உலகில் மொத்தம் நான்கு வகை ஹைனாக்கள் உள்ளன. இதில் வரிகள் கொண்ட கழுதைப்புலி இனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்த கழுதைப்புலிகளுக்கு பின்னங்கால் குட்டையாகவும், முன்னங்கால்கள் நீளமாகவும் இருக்கும். இதன் வலிமையான தாடைகளால் கடினமான எலும்புகள், கொம்புகள் போன்றவற்றையும் மெல்லக்கூடிய வலிமை இதற்கு உண்டு.

இந்த விலங்குகளின் முக்கிய உணவாக சிறுத்தை, சிங்கம், புலி போன்றவை வேட்டையாடி சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுகளாக உள்ளன. இவை மட்டுமின்றி இறந்து அழுகிப்போன உடல்களையும் இவை சாப்பிடும். இவற்றின் ஜீரண மண்டலத்தில் மிகக் கொடூரமான பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்கொள்ளும் சக்தி இருப்பதால், எந்த வகை உணவை சாப்பிட்டாலும் அவற்றின் உடலுக்குக் கேடு வருவதில்லை. மனிதர்கள் எப்படி பெயர் வைத்துக்கொண்டு ஒரு நபரை அடையாளம் கண்டுகொள்கிறோமோ, அதேபோல் கழுதைப்புலிகளும் தனித்துவமான சத்தத்தைப் பயன்படுத்தி அடையாளம் கண்டுகொள்கிறது. ஒவ்வொரு கழுதைப்புலிக்கும் அதன் சத்தம் மாறுபடும்.

கழுதைப்புலிகளின் நான்கு முக்கியப் பண்புகளில் முதன்மையானது ஒரு பெண் ஹைனா ஒரே ஒரு ஆண் ஹைனாவுடன் மட்டுமே இணையும். அதேபோல, ஆண் கழுதைப்புலி கூட்டத்தில் இருக்கும் மற்ற பெண் கழுதைப்புலியுடன் இணையாது. மேலும், இவை தனது சொந்தத்துக்குள் தனக்கான துணையை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்களைப் போலவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்கின்றன.

மற்ற விலங்குகளைப் பொறுத்தவரை, தனது குட்டிகளை பெண் மட்டுமே பார்த்துக்கொள்ளும். ஆனால், கழுதைப்புலி இனத்தில் பெண்ணுடன் சேர்ந்து ஆண் கழுதைப்புலியும் தனது குட்டிகளை வளர்த்து ஆளாக்கும். கழுதைப்புலி இனங்களில் ஆண்களை விட, பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும். பெண் கழுதைப்புலி விருப்பத்துக்கு ஏற்றபடிதான் அவற்றின் கூட்டம் செயல்படும்.

ஒரே சமயத்தில் நான்கு குட்டிகள் வரை ஈனும் கழுதைப்புலிகளின் கர்ப்ப காலம் 90 நாட்களாகும். பெரும்பாலான சமயங்களில் இவற்றின் குட்டிகள் பிறக்கும்போதே இறந்துவிடும். இரவு நேரத்தில் மட்டுமே தனது உணவைத் தேடும் கழுதைப்புலிகள், காலை சூரிய உதயத்துக்கு முன்பே தனது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்து விடும்.

மற்ற விலங்குகளைப் போலல்லாமல், தனது நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் மரியாதை கொடுக்கும் பண்பு கழுதைப்புலிகளுக்கு உண்டு. அழகாக நாவால் நக்கி, தன் பாசத்தை வெளிப்படுத்தும். மூக்கோடு மூக்கு வைத்து உரசி கொஞ்சி மகிழும். கழுதைப்புலிகளுக்கு பழிவாங்கும் குணம் இருப்பதால், அதை ஒருவர் தொந்தரவு செய்தால் ஞாபகம் வைத்துத் தாக்கும் புத்தி கூர்மை கொண்ட விலங்கு அது.

இத்தகைய பல குணநலன்கள் கழுதைப்புலிக்கு உள்ளன. இதன் பழிவாங்கும் குணத்தை மேற்கோள் காட்டிதான், ‘லியோ’ திரைப்படத்தில் இதை ரெஃபரன்ஸாக வைத்திருப்பார்கள் போலும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com