
ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றான கீரையை விளைவிக்கும் போது, சில ஊடுபயிர்களையும் சேர்த்து விதைத்தால் நல்ல இலாபம் கிடைக்கும். இதன் மூலம் கீரையின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அவ்வகையில் எந்தெந்தப் பயிர்களை கீரையின் நடுவே ஊடுபயிராக பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் கீரை விவசாயத்தில் பெரிதாக எந்தத் தொந்தரவும் இருக்காது. ஆனால், கோடை காலத்தில் அதிக வெப்பநிலை காரணமாக கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இம்மாதிரியான சமயங்களில் ஊடுபயிர்களை விளைவிப்பதன் மூலம், கீரைகளின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். கீரையை விடவும் சற்று உயரமாக வளரும் பயிர்களை ஊடுபயிராக பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் இந்தப் பயிர்களின் நிழல் கீரைகளைப் பாதுகாக்க உதவும். ஏனெனில் அதிக வெப்பநிலையில் வளரும் கீரைகளின் சுவை கசப்பாக இருக்கும். பலவகையான பருவகாலப் பயிர்களுடன் கீரை நன்றாக செழித்து வளரும்.
காலிஃபிளவர்: காலிஃபிளவர் பெரிய தாவரம் என்பதால், சிறிய அளவிலான தோட்டத்திற்கு பொருந்தாது. இதனை கீரையுடன் ஊடுபயிராக வளர்ப்பதால், உங்கள் இடத்தை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். காலிஃபிளவரின் கீழே கீரைகளை விதைத்தால், ஒரே நிலத்தில் இரண்டு பயிர்களை அறுவடை செய்ய முடியும். காலிஃபிளவர் மெதுவாக வளரும் என்பதால், கீரையை சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டியது அவசியம்.
பரட்டைக் கீரை (காலே): பிராசிகா குடும்பத்தைச் சேர்ந்த காலே, கீரையைப் போன்றே இருக்கும். இது மற்ற கீரைகளுடன் வளர்க்கும் போது நன்றாக செழித்து வளரும். காலே பூச்சிகளை ஈர்க்காது என்பதால், கீரைகளுடன் ஊடுபயிராக வளர்க்கும் போது பூச்சித் தாக்குதல் வெகுவாக குறையும்.
தக்காளி: வெப்பநிலை அதிகமாக இருக்கும் சூழலில் தக்காளி செடியின் நிழலானது, கீரைகளைப் பூக்காமல் பார்த்துக் கொள்ளும். ஏனெனில் தக்காளி செடியின் இலைகள், கீரைகளுக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும். மேலும் கீரைகளில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தக்காளியை ஊடுபயிராக வளர்ப்பது நல்லது. மிகக் குறைந்த பராமரிப்பு கொண்ட தக்காளி மற்றும் கீரைகளை ஒரே நேரத்தில் வளர்த்தால், நல்ல இலாபம் கிடைப்பது உறுதி.
பூண்டு: இலையுதிர் காலத்தில் விதைக்கப்பட்டு கோடையில் அறுவடை செய்யப்படும் பூண்டு, ஒருசில தோட்டக்கலைப் பயிர்களுக்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் கீரையுடன் பூண்டு நன்றாக செழித்து வளரும். சிறிய நிலப்பரப்பில் கீரைக்கு ஏற்ற துணையாக பூண்டு இருக்கும். பூண்டு நிலத்திற்கு அடியில் தான் வளரும் என்பதால், ஆழமற்ற வேர் கொண்ட கீரைகள் வளர போதிய இடம் கிடைக்கும். இம்முறையில் பூண்டு மற்றும் கீரை ஆகியவற்றை ஒரே நேரத்தில் அறுவடை செய்து கூடுதல் மகசூலை நம்மால் பெற முடியும்.
ஊடுபயிர்களை வளர்க்கும் போது, அதற்கென தனியாக தண்ணீர்ப் பாய்ச்சவோ, உரமிடவோ தேவையில்லை. நமக்கான செலவும், பராமரிப்பும் குறையும் என்பதைப் புரிந்து கொண்டு, ஊடுபயிர் முறையை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும்.