
பொதுவாக இலவம் பஞ்சு மரத்தில் இருக்கும் பெரிய காயைப் பார்க்கும் பொழுது அது பழுத்து கீழே விழும் என்றுதான் காத்திருப்போம். பின்னர் அதில் பஞ்சு வெடித்து பறப்பது கண்ணுக்குத் தெரியும். நாம் எப்படி சிறுவயதில் நினைத்தோமோ, அதே போல்தான் கிளியும் அந்தப் பழத்தை சாப்பிட ஆவலாக இருக்கும். ஆனால் பழம் கிடைக்காது. இதைத்தான் "இலவு காத்த கிளி போல" என்று கூறுவார்கள். இந்த மரத்தினால் என்னென்ன நன்மை, எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தென்னிந்தியாவில் இம்மரம் அதிகமாக குறிப்பாக தமிழக மாவட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இதை வளர்க்கமாட்டார்கள் என்றாலும் காற்றில் பறந்து வந்த விதை சில வீடுகளில் முளைத்து பயன் தருவதை பார்த்திருக்கிறோம்.
தட்பவெப்ப சூழ்நிலைகள்:
இலவம்பஞ்சு மரம் அதிகப்படியான மழையும் வறட்சி தன்மையும் தாங்கி வளரக்கூடிய மரம் .இது 850 முதல் 3000 மில்லி மீட்டர் மழை யளவு உள்ள இடங்களில் நன்கு வளரும் தன்மையுடையது. மேலும் வெப்பநிலை 18 முதல் 38 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்களில் வளரும் தன்மை உடையது. மரம் பொதுவாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரம் வரை இருக்கும் பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது.
இயல்புகள்:
இலையுதிர் காடுகளில் காணப்படும் இம்மரம் தற்போது தோட்டங்களாகவும் வளர்க்கப்படுகிறது. பூக்கள் அதிகப்படியான வாசனை மற்றும் அதிகப்படியான தேனைச் சுரக்கும்.
மரப் பண்புகள்:
சூரிய ஒளியை விரும்பும் இம்மரம் முதல் 34 வருடங்கள் வரை வேகமாக வளரும். நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கழித்து காய்க்கத் தொடங்கும்போது வளர்ச்சி விகிதம் குறைந்து விடும். இயற்கை முறை இனப்பெருக்கம் குறைவாகவே காணப்படும்.
செயற்கை இனப்பெருக்கம்:
நன்கு வளர்ந்து முதிர்ந்த மரத்திலிருந்து 1500 முதல் 2500 காய்கள் வரை எடுக்கலாம். ஒரு காயில் 120 முதல் 125 விதைகள் இருக்கும் .மார்ச் முதல் மே மாதங்களில் காய்களை சேகரித்து, சூரிய வெளிச்சத்தில் காய்களை காயவைத்து விதைகள் பிரிக்கப்படுகின்றன. ஒரு கிலோவிற்கு சுமார் 15860 விதைகள் வரை இருக்கும்.
நாற்றாங்கால் மேலாண்மை:
இலவமர விதைகள் கடினத்தன்மையுடன் இருப்பதால் இம்மர விதைகளை 24 மணி நேரத்தில் நீரில் ஊறவைத்து பின் முளைப்புக்கு தாய் பாத்தியில் தூவி விடவேண்டும்.
எளிய முறையில் மண் போட்டு விதைகளை மூடவேண்டும். விதைகள் ஏழு நாட்களில் முளைக்க ஆரம்பித்து சுமார் 30 நாட்கள் வரை நீடிக்கும் .இரண்டு முதல் மூன்று இலைகள் விட்ட நாற்றுகளை பிரித்தெடுத்து 15 ×25 சென்டிமீட்டர் அளவுள்ள பாலிதீன் பைகளில் மட்டும் சுமார் ஆறு மாதம் வளர்க்க வேண்டும்.
நடவு:
விதைகளை நேரடியாக வயலில் விதைக்கலாம். ஆனாலும் நன்கு வளர்ந்த நாற்றுக்களை நடுவதால் நல்ல பயன் கொடுக்கும். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 150 நாற்றுக்கள் நடலாம். அதாவது இடைவெளியானது 15 முதல் 20 அடி வரை இருக்கலாம். நடும் காலங்களில் நீர் பாசனம் செய்ய வேண்டும் .இலவ மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாக இருந்தாலும் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம், ஆண்டுக்கு இருமுறை உர மேலாண்மை இடுவது நல்ல பலனைத் தரும்.
அறுவடை:
வேகமாக வளரும் இம்மரம் மூணு நாலு வருடங்களில் 9 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது .30 லிருந்து 45 வருடங்கள் வரை மரத்திலிருந்து பயன்பெறலாம். இலவம் மரம் நட்ட நான்காம் ஆண்டு முதல் பலனை கொடுக்கும். ஆரம்ப காலத்தில் மரத்திற்கு சுமார் 200 காய்களும் நன்கு வளர்ந்த பிறகு ஒரு மரத்திற்கு ஆயிரம் முதல் 1500 காய்களும் மர மேலாண்மையை பொறுத்து பயன்பெறலாம்.
பயன்கள்:
தடிமரம் பச்சை கலந்த அரக்கு நிறத்துடன் எடை 450 -480 க்கு கிலோ கிராம் 3 மீட்டர் அடர்த்தி கொண்டது. ஒட்டுப்பலகை, தீக்குச்சி ,அட்டை பெட்டிகள் போன்றவற்றை செய்ய இதை பயன்படுத்துகிறார்கள்.
பஞ்சு:
பெரும்பாலும் இம்மரம் பஞ்சு தேவைக்கு அதிகமாக பயன்படுகிறது . உயிர் பாதுகாப்பு சட்டைகள், பெல்ட்டுகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
மேலும் வீட்டில் உள்ள மரங்களில் இருந்து மெத்தை, தலையணை போன்றவற்றை செய்து பயன்படுத்து கிறார்கள். சிலர் இதை செய்தும் விற்பது உண்டு. பஞ்சாகவும் கொடுத்து பணம் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் வருமானம் பெறலாம். அப்படியும் பெறுகிறார்கள்.