சில மாதங்கள் விவசாயிகள் நிலத்தில் உழைத்து, பயிர்களை வளர்த்து, விவசாயப் பயிர்களை அறுக்கும் காலகட்டத்தைத் தான் அறுவடைக் காலம் என்பார்கள். விவசாயிகளின் உழைப்புக்கு பலன் கிடைக்கும் நேரமும் இதுதான். பயிர் அறுவடையின் போது விற்பனைக்காக விளைபொருள்களை சேமித்து வைப்பார்கள். இதே நடைமுறையை பயன்படுத்தி நாம் மழைநீரிலும் அறுவடை செய்தால் விவசாயம் செழித்து வளர உதவும். எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள் சொல்கிறேன்.
மழைநீர் அறுவடை என்ற சொல் கூட சிலருக்கு புதிதாக இருக்கலாம். மழைநீர் சேமிப்பு தெரியும்; அது என்ன மழைநீர் அறுவடை. இரண்டிற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஏனெனில் இரண்டின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், இந்த செயல்முறை எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுகின்றன. எதிர்காலத் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்க அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மழைநீர் சேமிப்பு. வீட்டிற்கு வீடு மழைநீர் சேமிக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது.
மழைநீர் அறுவடை என்பது விவசாய நிலங்களில் மழைநீரைத் தேக்கி வைத்து, நிலத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதாகும். ஒரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் நில வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும்.
மழைநீரை அறுவடை செய்யும் கட்டமைப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
பண்ணைக் குட்டை:
விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் அரசு மானியத்துடன் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். நிலத்தில் தாழ்வானப் பகுதியைத் தேர்ந்தெடுத்து பண்ணைக் குட்டைகளை அமைப்பது சிறப்பாக இருக்கும். இதில் சேமிக்கப்படும் தண்ணீர் பயிர்களுக்கும், மரக்கன்றுகளுக்கும் உதவியாக இருக்கும். மேலும், இதில் மீன் குஞ்சுகளை வளர்த்து கூடுதல் வருமானத்தையும் பார்க்கலாம்.
சமமட்ட பள்ளம்:
மண் அரிப்பைத் தடுக்க வேளாண் பொறியியல் வல்லுநர்களால் சமமட்ட பள்ளம் அமைக்கப்படுகிறது. இதில் சேமிக்கப்படும் நீரால் ஈரப்பதம் நெடுநாட்களுக்கு நீடித்திருக்கும்.
தண்ணீர் சேகரிப்பு குழி:
நீளம் அகலம் இவ்வளவு தான் என்ற கணக்கெல்லாம் இதில் கிடையாது. ஆகையால் இம்முறையில் மழைநீரை அறுவடை செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இதன் நோக்கமே பெய்யும் மழைநீரை அதே இடத்தில் சேமிப்பதாகும். சிறு குறு விவசாயிகள் தங்களது நிலங்களில் உரக்குழிகள் போல் தண்ணீர் சேகரிப்பு குழிகளை அமைக்கலாம்.
தடுப்பணைகள்:
பொதுவாக பெய்யும் மழைநீரில் 20% முதல் 30% வரை ஓட்டமாகச் சென்றே வீணாகிறது. ஓடி வரும் நீரைத் தடுக்க ஓடைகளின் நடுவே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். நீர் இங்கு நிறுத்தி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர் வளம் பெருக்கோடு, மண் அரிப்பும் தடுக்கப்படும்.
விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட முறைகளில் குறைந்தபட்சம் 20% மழைநீரை சேகரித்தால் கூட அதன் பலன் நிலத்திலும், மகசூலிலும் எதிரொலிக்கும். மேகங்கள் நமக்களிக்கும் அமிர்தமாக மழையை வீணாக்காமல் சேகரிப்போம். இளைய தலைமுறை விவசாயிகளுக்கும் இதனை சொல்லிக் கொடுப்போம்.