பாரம்பரிய நெல் விதையை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: பெறுவது எப்படி?

பாரம்பரிய நெல் விதையை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: பெறுவது எப்படி?
Published on

வேளாண் துறை, வேளாண் உற்பத்தி மேம்பாடு மற்றும் பாரம்பரிய வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளாண் துறையின் கீழ் இயங்கும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், ‘மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்கும் விவசாயிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இதற்குத் தகுதியான விவசாயிகள், ‘அக்ரிஸ்நெட்’ இணையதளம் மூலமாகவோ அல்லது ‘உழவன்’ செயலி மூலமாகவோ அல்லது வட்டாரத்தில் இயங்கி வரும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு விண்ணப்பிப்பவர்களை மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் இயங்கும் தேர்வுக்குழு நேரடியாக ஆய்வு செய்து, தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி ஒரு முறை மட்டுமே பயன் பெற முடியும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகளின் தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு விவசாயி 100 பாரம்பரிய நெல் விதை ரகங்களை பாதுகாக்க வேண்டும். அவற்றை ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்து, மறு உற்பத்தி செய்து, இனத் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.

அதேசமயம், பாரம்பரிய விதைகளில் ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தக் கூடாது. இயற்கையான முறையில் விவசாயம் செய்து, அவற்றை முறையாகப் பயன்படுத்தி சாகுபடி செய்திருக்க வேண்டும். அதோடு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், விவசாயிகள் இவற்றை அறிந்துகொள்ளும் வகையில், பாரம்பரிய விதைகளை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com