
ஆக்டோபஸ் கடலில் வாழக்கூடிய ஒரு அதிசயமான உயிரினம். இதன் உடல் அமைப்பும், செயல்முறைகளும் மிகவும் வித்தியாசமானவை.
ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்கள் மற்றும் ஒன்பது மூளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பது மூளைகளில், எட்டு சிறிய மூளைகள் அதனுடைய கைகளில் உள்ளன. ஒன்பதாவது மூளை, அதின் கண்களுக்கு இடையே மையமூளையாக செயல்படுகிறது. இதனால் ஆக்டோபஸ்கள் பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்கின்றன.
இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதற்குக் காரணம் ஆக்டோபஸின் உடலில் காப்பர் (தாமிரம்) அடிப்படையிலான ஹீமோகுளோபின் (ஹீமோசயனின்) இருப்பதே. இது ஆக்டோபஸை குளிரான மற்றும் ஆக்சிஜன் குறைவான கடல் பகுதியிலும் வாழக்கூடியதாக வைக்கிறது.
ஆக்டோபஸ் அதன் உடலின் நிறத்தை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. இது, தன்னைக் காத்துக்கொள்ளவும், வேட்டையாடவும் உதவுகிறது. இதனை "காமெஃப்லாஜ்" (camouflage) என அழைக்கின்றோம்.
மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆக்டோபஸின் 8 கைகளும் தன்னிச்சையாக செயல்படும். எடுத்துக்காட்டாக, ஆக்டோபஸ் தன் ஒரு கையால் உண்ணும் பொழுதே, மற்ற கைகள், அருகில், வேட்டையாடும்; பிற விலங்குகள் உள்ளதா அல்லது கூடுதல் உணவுகள் உள்ளதா என ஆராயும்.
ஆக்டோபஸின் வாய் அதன் உடலின் அடிப்பகுதியில் உள்ளது. இதில் “ராடுலா” (radula) எனப்படும் ஒரு வகை கூர்மையான பகுதி இருப்பதால், அது உணவை நன்றாக அரைத்து உண்ண உதவும்.
ஆக்டோபஸை ஒரு மனிதன் தெரியாமலோ, பயத்திலோ தொட்டுவிட்டால், அது முதலில் கருப்பு மை போன்ற புகையை வெளியிட்டு தப்பிக்க முயலும். பின்னர், அது தன்னை பாதுகாக்க ஒருவர் மீது சுற்றிப் பிடிக்க வாய்ப்பு உண்டு. அதன் பிடியில் சிக்கிக்கொண்டால், தப்பிப்பது கொஞ்சம் சிரமம் தான்.
மேலும், ஆக்டோபஸ் மிகுந்த அறிவுடன் செயல்படும் உயிரினமாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு ஆக்டோபஸை ஒரு பெட்டியில் அடைத்தால், அது அதன் மூளைகளைப் பயன்படுத்தி வெளியே வரக்கூடிய திறன் கொண்டது . இது ஒரு விசித்திரமான, புத்திசாலியான உயிரினமாக நமக்குத் தெரிய வருகிறது.
ஆக்டோபஸ்கள் தனியாகவே வாழும் உயிரினமாகும். அவை முட்டை இடும் போது, அந்த இடத்திலேயே தங்கி, அதன் குஞ்சுகள் வெளிவரும் வரை அதனை பாதுகாப்பதில் முழு நேரத்தையும் செலவழிக்கின்றன. சில ஆக்டோபஸ்கள், குஞ்சுகள் வெளியே வந்ததும் அதன் தாய் நீண்ட நாட்களாக உணவின்றி இருப்பதால் இறந்து விடும்.
விசித்திர வகையான "டம்போ ஆக்டோபஸ்" - இதனை உலகில் அழகான அக்டோபஸ் என அழைப்பார்கள் . இதற்கு காதுகள் போன்ற அமைப்புகள் இருக்கின்றது. இவை ஆழ்ககடல் பகுதில் வாழ்கின்றன. சில வகையான ஆக்டோபஸ்கள் நாம் வீட்டில் வளர்க்கலாம். ஆனால் டம்போ ஆக்டோபஸ் வீட்டில் வளர்க்க முடியாது. காரணம், அதன் வாழ்க்கைச் சூழ்நிலையும் (ஆழ்கடலில் வாழக்கூடியது) , தேவைகளும் காரணமாக இதை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க முடியாது.