
கும்பிடுப்பூச்சி (Praying Mantis) அல்லது தயிர்க்கடை பூச்சி, இடையன் பூச்சி என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி. பெண் கும்பிடுப்பூச்சிகள் ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும், வலிமையானதாகவும் காணப்படும்.
இதற்கு 6 கால்கள் உண்டு. நான்கு கால்களை தரையில் ஊன்றி, மற்ற இரண்டு முன்னங்கால்களை தூக்கியவாறு இருக்கும். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும். எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம். மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.
இந்த பூச்சிகள் இலைகள் மற்றும் கிளைகளின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன. இது வேட்டையாடுபவர்களால் கண்டறியப்படுவதைத் தவிர்க்கவும், தங்கள் இரையை மிகவும் திறம்பட பதுங்கியிருந்து தாக்கவும் உதவுகிறது.
உலகில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கும்பிடு பூச்சி இனங்கள் உள்ளன.
சில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு. இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும். வளர்ந்த பிறகு பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் அல்லது மரத்தின் நிறத்தில் காணப்படுகின்றன. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வகைகள் உண்டு. தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.
இவற்றின் பரந்த கண், 3-டி பார்வை திறனை கொண்டிருப்பதால் எதையும் தெளிவாக பார்க்க முடியும். இது வேட்டையாடிப் பூச்சி ஆகும். இதன் இரு வலுவான, முன்னங்கால்களிலும் முட்கள் போன்ற அமைப்பு உள்ளது. இதை பயன்படுத்தி மற்ற பூச்சிகளை எளிதாக வேட்டையாடி உண்கின்றன. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை.
இவை பூச்சிகளை மட்டுமல்லாமல் சிறிய தவளை, சிறிய பறவையான ஹம்மிங் பறவை, பல்லி, சிலந்தி போன்றவற்றையும் உண்கின்றன. இந்த பூச்சி பகல் நேரத்தில் காணப்பட்டாலும் இரவிலேயே தனது உணவை அதிகமாக வேட்டையாடி உண்கின்றன. இவற்றை பெரும்பாலும் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் அதிகம் காணமுடியும். விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை உண்ணுமே தவிர, இவற்றால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மேலும் அவை பொதுவாக மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை. அவை பெரும்பாலும் கூச்ச சுபாவமுள்ளவை. மக்களுடன் தொடர்பைத் தவிர்க்கும்.