பாலைவனத்தில் மட்டுமே வாழும் Sand Cats–ன் சுவாரசிய தகவல்கள்!

Sand Cats
Sand Cats
Published on

பஞ்சு போன்ற காதுகள், பெரிய பெரிய கண்கள், சின்ன மூக்கு கொண்ட அழகிய பூனைகளைப் பார்த்தால், வீட்டிற்கு கொண்டு வர ஆசையாகத்தான் இருக்கும். ஆனால், பாலைவனத்தில் வாழும் மிகவும் அழகான இந்தப் பூனைகளை வீட்டிற்கு கொண்டு வர நினைத்தால், அவ்வளவுதான். இந்த Sand cats பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், மிகவும் பொல்லாதது.

Sand Cats அல்லது Sand Dune Cats என்று அழைக்கப்படும் இந்த Felis margarita, பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் அதிகம் காணப்படும். மேலும் இவை, அல்ஜீரியா, நைகர், மொராக்கோ, ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், அரேபியன் பெனின்சுலா ஆகிய நாடுகளில் உள்ள பாலைவனங்களிலும் காணப்படுகின்றன.

1858ம் ஆண்டு ஒரு ஃப்ரென்ச் சிப்பாய் சஹாரா பாலைவனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது ஒரு உயிரினத்தை தூரத்திலிருந்து பார்த்து அச்சமடைந்திருக்கிறார். பின், அதனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அருகில் சென்று பார்த்தார். அப்போதுதான் அது பூனை என்பதுத் தெரியவந்தது. அவர்தான் முதன்முதலில் பாலைவனத்தில் பூனை வாழ்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

Bobcats போன்ற பாலைவனத்தை கடந்து செல்லும் பூனைகள் நிறையவே உள்ளன. ஆனால், முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே வாழும் பூனைகள் என்றால் அது Sand Dune Cats தான். இந்த பூனைகள், அங்கு தன்னை காலநிலையிலிருந்து இரண்டு வழிகளில் தற்காத்துக் கொள்கின்றன. அதாவது பாதங்கள், குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் வளரும் அதன் முடிகள் அதிக வெப்பத்திலிருந்து அதனை காக்கிறது. இந்த முடிகள், வெப்பம் அதன் உடலில் ஏறாதது போல் பார்த்துக்கொள்கின்றன. காலையில் அதிக வெயிலிலிருந்து அதனைப் பாதுகாக்கும் அதனுடைய முடி, இரவில் அதிக குளிரிலிருந்தும் பாதுகாக்கிறது.

இரண்டாவது, Sand Cats-க்கு அதிகமான தண்ணீர் தேவையில்லை. ஒரு வாரம் கூட ஒரு சொட்டு நீர் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஏனெனில் அதற்கு, தான் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் ஈரப்பதமே போதுமானது.

இதையும் படியுங்கள்:
நீரிலேயே இருந்தாலும் நீர் அருந்தாத உயிரினங்கள்!
Sand Cats

அவை பால் குடிக்கும் பூனைகள் அல்ல, பறவைகள், முயல்கள், பூச்சிகள், பாம்புகள் என அனைத்தையும் வேட்டையாடி சாப்பிடக் கூடிய பூனைகள் ஆகும். குறிப்பாக இது இரவு நேரங்களிலேயே வேட்டையாடி சாப்பிடும் குணாதிசயத்தைக் கொண்டது. தன்னுடைய இரை எங்குள்ளது என்பதைக் கேட்கும்திறன் மூலமே கணித்து வேட்டையாடும். அளவுக்கதிகமாக இரை கிடைத்தால், அதனை அடுத்த வேளை சாப்பிட மண்ணில் புதைத்து வைக்கும்.

சிறுநீரின் வாசனை வைத்தே, தான் இருப்பதை மற்ற உயிரனங்களுக்குத் தெரிவிக்கும். மண்ணில் குழிப் பறித்து, அதில் வாழும் இந்தப் பூனைகள், இரை தேட வெளியேறும் முன் ஒரு 15 நிமிடங்கள் யாரும் வருகிறார்களா? என்று காவலுக்கு இருந்துவிட்டுதான் தனது வீட்டைவிட்டு வெளியேறுமாம்.

முன்பு அதிக அளவில் காணப்பட்ட இந்த Sand cats, தற்போது  மிகக் குறைவாகவே உள்ளன. இன்னும் சில வருடங்களில் இது அழிவை நோக்கிச் செல்லும் உயிரினங்களின் பட்டியலில் வந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com