கழற்றி மாற்றக்கூடிய பிளாஸ்டிக் பல் துலக்கிகளை அறிமுகப்படுத்தலாமே!

Girl brushing her teeth
Girl brushing her teeth

ல் துலக்கிகள் நாம் வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாகிவிட்டது. தற்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக்கிலான பல் துலக்கிகளை உபயோகிக்கிறோம். மூன்று அல்லது நான்கு மாதங்கள் உபயோகித்துவிட்டு குப்பையில் போட்டுவிட்டு மீண்டும் புதிய பல் துலக்கியை வாங்கி உபயோகிக்கத் தொடங்குகிறோம். அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காதவை. சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிப்பவை.

சில கூட்டுக் கலவையினால் உருவாக்கப்படும் பல் துலக்கிகள் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் ஒழுங்காக உடையாமல் இயந்திரத்தினுள் மாட்டிக் கொள்ளுவதால் பொதுவாக பல் துலக்கிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதற்கென பிரத்யேக இயந்திரங்களை வைத்துள்ள ஒருசில பெரிய நிறுவனங்களால் மட்டுமே இதை மறுசுழற்சி செய்ய முடிகிறது.

ஒரு மனிதர் சராசரியாக ஒரு வருடத்திற்கு நான்கு பல் துலக்கிகளை பயன்படுத்துகிறார் என வைத்துக்கொண்டால் எட்டு பில்லியன் மக்கள் ஒரு வருடத்தில் முப்பத்தி இரண்டு பில்லியன் பல் துலக்கிகளை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடும் என்கிறது ஒரு ஆய்வு. இத்தகைய பயன்படுத்தப்பட்ட பல் துலக்கிகளால் நாம் உண்டாக்கும் மக்கா பிளாஸ்டிக் கழிவின் எடை எவ்வளவு டன் இருக்கும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இத்தகைய பிளாஸ்டிக்குகளுக்கு அழிவென்பதே இல்லை. கி.பி.1938ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பல் துலக்கிகள் இன்றும் இந்த பூமியிலேயே அழியாமல் இருக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பல் துலக்கிகள் பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படுவதால் அவை மக்காமல் பூமியில் புதைந்து சுற்றுச்சூழல் மாசினை உண்டாக்குகிறது. தற்போது மூங்கிலினால் உருவாக்கப்படும் பல் துலக்கிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. அவற்றை மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கத்தானே செய்கிறது. தற்போது ஷேவிங் செய்யப் பயன்படும் ரேசர்களில் கைப்பிடி தனியாகவும் அதில் பிளேடை கழற்றி மாற்றும் வகையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு ரேசர் கைப்பிடி மற்றும் அதனுடன் ஐந்து கழற்றி மாட்டக் கூடிய பிளேடுகளோடு விற்பனை செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் பல் துலக்கிகளையும் இதுபோல நாம் உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் தரும் 7 பானங்கள்!
Girl brushing her teeth

தற்போது அலுமினியத்தால் ஆன கைப்பிடியும் (Aluminium Handle) பிளாஸ்டிக்கிலான பிரஷ் (Plastic Brush Head) கொண்ட பல் துலக்கிகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. உபயோகப்படுத்திவிட்டு பழைய பிரஷ்ஷை அகற்றிவிட்டு புதிய பிரஷ் பகுதியை மட்டும் கைப்பிடியில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது போலவே, பிளாஸ்டிக் கைப்பிடியைத் தனியாகவும் அதன் முனையில் கழற்றி மாட்டக்கூடிய வகையில் பிரஷ்ஷைத் தனியாகவும் டிசைன் செய்து அறிமுகப்படுத்தலாம். இப்படியாக ஒரு பல் துலக்கியின் கைப்பிடி மற்றும் அதனுடன் நான்கு எண்ணிக்கையில் கழற்றி மாட்டக்கூடிய பிரஷ் பகுதி என அறிமுகப்படுத்தலாம். இத்தகைய ஒரு பல் துலக்கி வாங்கினால் அது நான்கு பல் துலக்கிகள் வாங்குவதற்கு சமமாகும். இதன் மூலம் உபயோகிப்பாளர்களுக்கும் பணம் கணிசமாக மிச்சமாகும். உபயோகித்த பிளாஸ்டிக் பல் துலக்கியின் மூலம் உருவாகும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளின் எடையும் கணிசமாகக் குறையும்.

நம்மை வாழ வைக்கும் பூமியைத் தூய்மையாகப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தத் தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பல் துலக்கித் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்திப் பார்க்கலாம். வெற்றி பெற்றால் வாடிக்கையாளர்களுக்கும் கணிசமான தொகை மிச்சமாகும். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைத்து பூமியையும் சுற்றுச்சூழலையும் பாதுக்காத்த மகிழ்ச்சியும் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com