

நமது வீட்டைச் சுற்றியும், வயல்வெளிகளிலும் நாம் தினமும் பல செடி கொடிகளையும் உயிரினங்களையும் பார்க்கிறோம். அவை எல்லாமே நம் மண்ணுக்குச் சொந்தமானவை என்று நினைத்தால் அதுதான் மிகப்பெரிய தவறு. சில உயிரினங்கள் தற்செயலாகவோ, மனிதர்களின் ஆசையினாலோ வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து, நமது உள்ளூர் உயிரினங்களை அழித்துத் தாமும் ஆக்கிரமித்து வாழ்கின்றன.
இவற்றைத்தான் 'ஆக்கிரமிப்பு அன்னிய உயிரினங்கள்' (Invasive Species) என்று அழைக்கிறோம். உலகம் முழுவதும் இதுபோல பல உயிரினங்கள் இருந்தாலும், இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளன. அவற்றில் நாம் தினமும் கடந்து செல்லும் 4 முக்கிய வில்லன்களைப் பற்றி பார்ப்போம்.
1. உண்ணிச்செடி (Lantana Camara)!
விஷக்கொடி, கருவேலமரம் வரிசையில் மிக முக்கியமானது இந்த உண்ணிச்செடி. 1800-களில் ஆங்கிலேயர்கள் இதன் வண்ணமயமான பூக்களைப் பார்த்து ஆசைப்பட்டு வெளிநாட்டில் இருந்து இங்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று இந்தியாவில் சுமார் 3.25 கோடி ஏக்கர் பரப்பளவில் இது ஆக்கிரமித்துள்ளது.
இது வளரும் இடங்களில் ஒருவித வேதிப்பொருளை மண்ணில் கக்குவதால் வேறு எந்த செடியும் அங்கு வளர முடியாது. இது எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் காட்டுத்தீ பரவ முக்கிய காரணமாக இருக்கிறது. தாவர உண்ணிகளுக்கு உணவு கிடைக்காமல் போவதால், உணவுச் சங்கிலியே பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் இதைச் சாப்பிட்டால் சில நாட்களிலேயே உயிரிழக்க நேரிடும்.
2. ஆகாயத்தாமரை (Water Hyacinth)!
1890-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயப் பெண்மணி இதன் அழகான ஊதா நிறப் பூக்களுக்காக இதனை இங்கு கொண்டு வந்தார். இரண்டே வாரங்களில் இது இரட்டிப்பு மடங்காக வளரக்கூடியது. இதனால் நீர்நிலைகளில் சூரிய ஒளி படாமல், தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை இதுவே உறிஞ்சிக் கொள்கிறது.
இதன் விளைவாகத் தண்ணீரில் உள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் மூச்சுத் திணறி இறக்கின்றன. மேலும், கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய இது ஒரு சொர்க்கமாக மாறுவதால் மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவக் காரணமாகிறது.
3. கம்பூசியா மீன் (Mosquito Fish / Gambusia affinis)!
1920-களில் மலேரியா காய்ச்சல் அதிகமாக இருந்ததால், கொசுக்களின் முட்டைகளை சாப்பிட்டு அழிப்பதற்காக இந்த மீன் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மீன் கொசுக்களைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நமது உள்ளூர் மீன்கள் மற்றும் தவளைகளின் முட்டைகளைச் சாப்பிட்டு நமது நீர்நிலைச் சூழலையே நாசமாக்கிவிட்டது. கொசுக்களை அழிக்க நமது நாட்டிலேயே Blue Panchax என்ற அருமையான மீன் உள்ளது, இது மற்ற உயிரினங்களை அழிக்காமல் கொசுக்களை மட்டும் வேட்டையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பழுப்பு எலி / நார்வே எலி (Brown Rat)!
இது மனிதர்கள் விரும்பிக் கொண்டு வந்தது அல்ல, கப்பல்களில் டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக ஏறி உலகம் முழுவதும் பரவிய ஒரு கிரிமினல். பிளேக் நோய் பரவி சுமார் 1 கோடியே 20 லட்சம் மக்கள் உயிரிழக்க இந்த எலியும் ஒரு முக்கிய காரணம். இது மின் வயர்களைக் கடித்து மின் விபத்துகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாம் சேமித்து வைக்கும் தானியங்களில் 10 சதவீதத்தை இதுவே சாப்பிட்டு விடுகிறது. சுவாரஸ்யமாக, நமது உள்ளூர் சுண்டெலிகள் மற்றும் கருப்பு எலிகள்கூட இதுபோலவே கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு ஆக்கிரமிப்பு உயிரினங்களாகச் சேட்டை செய்து வருகின்றன.
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே" என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் பொருந்தும். அழகுக்காகவோ, அல்லது வேறு ஒரு காரணத்திற்காகவோ எந்த ஒரு அன்னிய உயிரினத்தையும் அதன் வாழிடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு மாற்றுவது எவ்வளவு பெரிய இயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.
நமது மண்ணின் பல்லுயிர்த் தன்மையைக் காக்க இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்.