சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளின் தரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், பரிசோதனை செய்து கொள்வதற்காகவும் திருவாரூர் விவசாய விதை பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். நடப்பாண்டில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பலவிதமான நவீன முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டாலும் விளைச்சலுக்கு நல்ல தரமான விதைகளே முக்கிய காரணமாக இருக்கும். அதனாலேயே விவசாயிகள் விதைகளை தேர்வு செய்யும்போது கூடுதல் முக்கியத்துவம் தருவர்.
சாகுபடிக்கு தேவையான விதை நெல் ரகங்களான சி.ஆர் .1009-சப் 1, சாவித்திரி ஏடீடி - 38, ஏடீடி - 39, ஏடீடி - 46, ஏடீடி -50, ஏடீடி -51, ஏடீடி -54, சொர்ணா சப் -1, கோ.ஆர்-49 மற்றும் மத்திய கால ரகங்களான கோ.ஆர் -50, டி.கே.எம் .13, எம்.டி.யூ -7029, நெல்லூர் திருச்சி-3, கோ-43, சம்பா மகசூரி, வெள்ளை பொன்னி போன்ற விதைகள் தேவையான அளவு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், விவசாயிகள் சான்று பெறாத தங்கள் சொந்த விதைகளையும் பயன்படுத்துகின்றனர். அதேநேரம் அந்த விதைகள் தரத்துடனும் நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள திருவாரூர் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பின்பு பயன்படுத்த திருவாரூர் மாவட்ட வேளாண் விதை பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்து இருக்கிறது.
மேலும், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள நெல் விதைகளின் தரத்தை அறிய 100 கிராம் விதை மாதிரியும் மற்றும் மாதிரிக்கு 80 ரூபாய் கட்டணத்தையும் நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலமாகவோ, ‘மூத்த வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், 15-பி, பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர்’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றும், அனுப்பவர் தம்முடைய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.