
நாம் தற்போது விரைவான தொழில்நுட்ப முன்னேற்ற யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு நம்முடைய வாழ்க்கை, செய்யும் வேலை மற்றும் தொடர்புகொள்ளும் விதத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. நம்முடைய செயல்திறனை மேம்படுத்துவதிலிருந்து, தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்துவது வரை AI தொழில்நுட்பம் சந்தேகத்திற்கு இடமின்றி பல அற்புத மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பம் நம்முடைய சுற்றுச்சூழலை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக ஆற்றல் தேவை: AI அல்காரிதம் மற்றும் அவற்றின் மாதிரிகளுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. இவை மிகப்பெரிய தரவு மையங்கள், அவற்றுக்கான பயிற்சி மற்றும் அதிநவீன AI மாதிரிகளை இயக்குவதற்கு அவசியமாகிறது. இதனால் அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுவதால் இந்த தொழில்நுட்பத்தால் உலகில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்துவிடுமோ என்ற கவலைகள் எழுகின்றன.
இயற்கை வளங்களின் தேவை: இந்தத் தொழில்நுட்பத்தில் யாருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், AI சிறப்பாக செயல்பட அதற்கு முதலில் பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது. இதற்குப் பயிற்சி அளிப்பதற்காக GPUகளின் உதவியை நம்பியுள்ளது. இவற்றைப் பயிற்றுவிப்பதற்காக GPU உருவாக்குவதற்கு சுற்றுச்சூழல் வளங்கள் தேவைப்படுகின்றன. இதனால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை பெரிதும் பாதிக்கப்படலாம்.
மின் கழிவுகள்: இப்போதெல்லாம் அதிகப்படியான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வெளிவருவதால், பழைய AI சாதனங்கள் விரைவில் பழையதாகிவிடுகிறது. இது எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இவை பெரும்பாலும் இயற்கை நிலப்பரப்புகளை ஆட்கொள்வதால், மின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், காலாவதியான பழைய பொருட்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மறு சுழற்சி செய்வதிலும் சவாலை ஏற்படுத்துகிறது.
எனவே. இத்தகைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாதையை சிறப்பாக வடிவமைப்பது அரசாங்கம் மற்றும் இதை உருவாக்குபவர்களின் பொறுப்பாகும். இதனால் முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வண்ணம் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடக்கம் முதலே இந்தத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு அரசாங்கம் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும்.