அழிந்து வருகிறதா இந்திய வேளாண்மை?

அழிந்து வருகிறதா இந்திய வேளாண்மை?
Published on

ந்திய சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரம் அடைந்து சில காலங்கள் வரையும் விவசாயிகள் கொத்தடிமைகளாகவும், அதிக அநீதி இழைக்கப்பட்டவர்களாகவுமே இருந்து வந்தனர். மேலும், பலவித கொடுமைகளுக்கும், சவுக்கடிகளுக்கும் உள்ளாகி உயிரையே தியாகம் செய்த எத்தனையோ டெல்டா பகுதி விவசாயிகள் அதிகம் பேர் உண்டு. இவ்வாறு விவசாயிகள் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் நடத்தப்பட்டு வந்த அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் தற்போது குறைந்து இருக்கிறது.

மேலும், விவசாயம் என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகவும், விவசாயிகள் மதிக்கப்படும் நபர்களாகவும் கருதப்படுகின்றனர். ஆனால், இந்த வகை மாற்றத்தால் விவசாயிகளினுடைய வாழ்க்கை முறையிலும், பொருளாதாரத்திலுய் மாற்றம் ஏற்படவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் பிரதான தொழில் விவசாயம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்களில் பெரும் பகுதியினர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிப்பது விவசாயமும் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களும்தான். மேலும், விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று விளங்குகிறது. அதுமட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து, உலகின் மிகப்பெரிய விளைச்சல் கொண்ட பரப்பாக இந்திய நிலப்பரப்புகள் விளங்குகின்றன.

ஆனாலும், விவசாயிகளுடைய நிலை பரிதாபம் நிறைந்ததாகவே இருக்கிறது. 1951ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகையில் 25 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். 1991ம் ஆண்டில் அது 17 சதவீதமாகக் குறைந்தது. சிறு குறு விவசாயிகளின் நிலை 2003ம் ஆண்டு 20.4 சதவீதமாக இருந்தது. 2021ம் ஆண்டு 24.9 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது. இது மட்டுமல்லாது, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 99 சதவீத விவசாயிகள் கடனாளியாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 80 சதவீதம் விவசாயிகள் கடனாளிகளாகவும் உள்ளனர்.

விவசாயத் தொழிலுக்கு வரி விலக்கு இருந்தாலும், அதன் மூலம் பண்ணையாளர்கள், ஜமீன்தாரர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுமே பயனடைந்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் அயிலை சிவசூரியன், ‘கல்கி’ ஆன்லைனுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், “இந்தியாவில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்கள் மற்றும் சிறப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் விவசாயிகளுடைய வாழ்க்கை முறையில் முன்னேற்றம் காண முடியாத நிலை நிலவுகிறது. ஒரு பக்கம் இயற்கை, மறு பக்கம் அரசின் தவறான செயல்முறைகள் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அளவில் குறைந்து வருகின்றனர்.

அயிலை சிவசூரியன்
அயிலை சிவசூரியன்

மேலும், உலகமயம் மற்றும் தாராளமயத்தை ஊக்குவித்த, ‘ஒன் டு த்ரீ ’ ஒப்பந்தம் இந்தியாவின் விவசாயத் துறையை பெருமளவில் புரட்டிப் போட்டு இருக்கிறது. ஒரு ஆய்வு அறிக்கையின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2012 முதல் 2022ம் ஆண்டு காலம் வரை 8,719 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வங்கிக் கடன் பெற்று திரும்பிச் செலுத்த முடியாமல் 1,929 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு அவர்களால் விலை நிர்ணயிக்க முடியாத நிலை நிலவுகிறது. விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை. விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்வதற்கான வருமானம் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் மாற்றுத்துறையை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மேலும், நகரமயமாக்கல் இன்றைய இளம் தலைமுறையை விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தி வருகிறது. மேலும், பெற்றோர்களும் தங்கள் மகன், மகள் விவசாயத் தொழில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. இதுபோன்ற காரணங்களால் விளைநிலங்களும் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகின்றன. பல விளைநிலங்கள் கான்கிரீட் கட்டடங்களாக மாறியிருக்கின்றன.

இவ்வாறான செயற்கை பிரச்னைகளுக்கு மத்தியில் இயற்கையும் விவசாயிகளை தண்டித்து வருகிறது. பருவநிலை மாற்றம், அதிக அளவிலான மழை, மழையே இல்லாத சூழல், மிகக்கடுமையான வெயில் ஆகியவை விளைச்சலை பெருமளவில் பாதிக்கின்றது. இப்படி எண்ணற்ற பிரச்னைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளும், விவசாயமும் சிறுகச் சிறுக அழிக்கப்படுகிறது. இதனுடைய விளைவு வருங்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்துக்குக் காரணமாக விளங்கும்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com