
பறவைகளின் எச்சங்கள் (Bird droppings) உரமாகப் பயன்படுத்தப்படுவது, ‘குவானோ’ (Guano) எனப்படுகிறது. இது நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களால் மிகுந்த இயற்கை உரமாகும். குவானோ (பறவைகளின் எச்சம்) உரத்தை ஏற்றுமதி செய்து செல்வம் கொழிக்கும் முக்கிய நாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெரு (Peru): உலகின் மிகப் பிரபலமான குவானோ ஏற்றுமதி நாடு இதுவாகும். பெரு கடற்கரையிலுள்ள தீவுகளில் காமரண்ட், பூபி, பெலிகன் போன்ற ஆயிரக்கணக்கான கடற்பறவைகள் வசித்து வருகின்ற காரணத்தால் இங்கு மிகுந்த அளவில் குவானோ உற்பத்தியாகிறது. பெரு அரசாங்கமே இதை இயற்கை உரமாக சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பறவைகளின் எச்சங்களை உரமாக்கி அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு பெரு ஆகும்.
சிலி (Chile): பெருவை போலவே, சிலியின் வடக்கு கடற்கரைப் பகுதிகளிலும் குவானோ சேகரிப்பு நடைபெறுகிறது. பெரும்பாலும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்த குவானோ உரம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நமீபியா (Namibia) மற்றும் தென் ஆப்பிரிக்கா (South Africa): இந்நாடுகளிலும் கடற்கரை பாறை தீவுகளில் பறவைகள் பெருமளவில் வாழ்வதால் சிறிய அளவில் குவானோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அறிவியல் முக்கியத்துவம்: குவானோவில் உள்ள நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) ஆகியவை தாவர வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. இதனால், ‘பறவைகளின் எச்சம் உலகின் மிகச் சிறந்த இயற்கை உரமாக’ அழைக்கப்படுகிறது.
குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான நௌரு, பரப்பளவில் உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகும். ஆனால், அதன் இயற்கை வளம் உலகை ஆச்சரியப்படுத்துகிறது. பறவைகளின் எச்சங்களால் உருவான பாஸ்பேட் கல் இந்நாட்டின் செல்வத்தின் அடிப்படை ஆகும்.
நௌருவின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடற்பறவைகள் தங்கியிருந்தன. அவற்றின் எச்சங்களும் கடல் உயிர்களின் எச்சங்களும் இணைந்து, காலப்போக்கில் பாஸ்பேட் (Phosphate) எனப்படும் கனிமமாக மாறின. இந்த பாஸ்பேட் ஒரு மிகச்சிறந்த இயற்கை உரமாக இருப்பதால், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நௌரு உலகின் முக்கிய பாஸ்பேட் ஏற்றுமதி நாடாக மாறியது. இதன் மூலம் இந்நாடு பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது.
உலக நாடுகள் அனைத்தும் நௌருவில் இருந்து உரக் கற்களை இறக்குமதி செய்தன. சில காலத்தில் நௌரு ‘பசிபிக் பெருங்கடலின் செல்வத் தீவு’ என அழைக்கப்பட்டது. ஆனால், அதிக அளவில் பாஸ்பேட் அகழப்பட்டதால் அதன் குவியல்கள் குறைந்து போனது. இதனால் இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பாஸ்பேட் வளங்கள் காலப்போக்கில் குறைந்ததால், தற்போது நௌருவின் பொருளாதாரம் பல சவால்களைச் சந்திக்கிறது. இப்போது சுற்றுலா, மீன்பிடி போன்ற துறைகளில் வளர்ச்சியடைய இந்நாடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நௌருவில் சுற்றுலா துறை மிகவும் குறைவு. ஏனெனில், இது மிகவும் சிறிய நாடு. ஒரு சுற்று சாலை முழு நாட்டையும் 30 நிமிடங்களில் வாகனத்தில் சுற்றி வர முடியும். இந்நாடு காமன்வெல்த் (Commonwealth) உறுப்பு நாடாக உள்ளது. இயற்கை வளம் எவ்வாறு ஒரு நாட்டை செழிக்கச் செய்ய முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக நௌரு இன்று நினைவுகூரப்படுகிறது.