காலம் அறிந்து பயிர் செய்வதே சிறந்தது!

Paddy
Paddy
Published on

பெரியவர்கள், ‘காலத்தே பயிர் செய்’ என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம், ‘ஒரு செயலை அதை செய்வதற்கான சரியான நேரத்தில் செய்ய வேண்டும்’ என்பதாகும். இது நம் வாழ்வில் அனைத்துக்குமே பொருந்தும். குறிப்பாக, விவசாயத்தில் இதைக் கடைபிடித்தால் மட்டுமே, சரியான மகசூலை எட்ட முடியும்.

நெற்பயிர் விவசாயத்துக்கு ஏற்றதாக விளங்குகிறது ஆடி மாதம். இந்த மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மூலம் பல பயிர்களை விளையச் செய்கிறார்கள். ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தை முன் சம்பா பட்டம் என நமது முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இந்தப் பட்டம் 130 நாட்கள் வரையிலான பயிர்களை சாகுபடி செய்வதற்கு உகந்தது.

சமீப காலமாகவே பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் இவற்றுக்கென தனியாக இருந்த ஆர்கானிக் ஸ்டோர்களில் மட்டுமே இவை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண கடைகளிலும் பாரம்பரிய அரிசி வகைகள் கிடைக்கின்றன. பல ஓட்டல்களில், ‘பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட சாப்பாடு’ என விளம்பரப்படுத்தி புதிய மார்க்கெட்டிங் யுத்தியைப் பயன்படுத்தி லாபம் பார்க்கிறார்கள்.

எனவே, இந்த காலகட்டத்தில் சிவப்பு கவுனி, தூயமல்லி, சீரக சம்பா உள்ளிட்ட 130 நாட்களுக்குள் விளையக்கூடிய நெல் ரகங்களைப் பயிரிடலாம். இந்தப் பட்டத்தில் தேனி, மதுரை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு உகந்ததாகும். அடுத்ததாக, அக்டோபர் முதல் நவம்பர் வரை உள்ள பருவத்தை, ‘தாளடி பட்டம்’ என்கிறார்கள். இச்சமயத்தில் 120 நாட்களுக்குள் விளையக்கூடிய நெல் ரகங்களைப் பயிரிடுவது நல்லதாக இருக்கும். அன்னமழகி, குள்ளகார் உள்ளிட்ட குறைந்த காலத்தில் விளையக்கூடிய பயிர் ரகங்களை இச்சமயத்தில் பயிரிடலாம்.

இந்த சீசனில் பொதுவாகவே திருச்சி, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியானோர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, நாம் நினைக்கும் போதெல்லாம் விவசாயம் செய்து லாபம் ஏற்றலாம் என நினைப்பது தவறாகும். சரியான காலத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விவசாயம் செய்தால், விவசாயத்திலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com