மரங்களை வெட்டினால் சிறை: தமிழ்நாட்டில் புதிய சட்டம்?

மரங்களை வெட்டினால் சிறை: தமிழ்நாட்டில் புதிய சட்டம்?

ரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாட்டில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் அனாவசியமாக மரங்களை வெட்டுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

புவி வெப்பமயமாதல் என்பது இன்று உலகம் முழுவதும் காணப்படும் மிக முக்கிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும் உலக சுற்றுச் சூழலையே மாற்றி அமைக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் உயிரினங்கள் முதல் பூமியின் அனைத்து இயல்புகளும் அதிகப்படியான ஆபத்தை சந்திக்கின்றன. மரங்களை வெட்டி வனப்பகுதிகளை அழிப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பசுமை தன்மையைப் பாதுகாக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும், மேலும் வனப்பரப்பை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லி வனப் பாதுகாப்பு சட்டம் 1994 மற்றும் பிற மாநில வனச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டின் வனப்பகுதியை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வனப்பகுதியை அதிகரிக்கவும், மேலும் மரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய சட்டம் இயற்ற உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

டெல்லியில் மரத்தை அரசின் அனுமதி பெறாமல் வெட்டினால் ஒரு வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டம் உள்ளது. அதேபோன்று கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு புதிய சட்டமும் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு அரசு இயற்றவுள்ள இந்தச் சட்டத்தில் பொது இடங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான இடங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடங்கள் என்று எந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதென்றாலும் முன்னரே அரசிடம் விண்ணப்பித்து அதற்கு அனுமதி பெற வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், மரத்தை வெட்டுவோருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம்.

‘இந்தச் சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டினுடைய வனப்பகுதிகள் பாதுகாக்கப்படுவதோடு, வனவிலங்குகளும் பாதுகாக்கப்படும். மேலும், பூமிக்குத் தேவையான இயற்கை சத்துகள் கிடைக்க வழி ஏற்படும். அதோடு, வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் தடுக்கப்படும்’ என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com