இயற்கையின் எல்லையற்ற உலகில் வாழும் அசாதாரண உயிரினங்கள் பல தொடர்ந்து நம்மை கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் ஜுவல் குளவிகளும் ஒன்று. பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் இந்தக் குளவிகள், பூச்சி உலகின் அதிசயம் என்றுதான் கூற வேண்டும். இதன் வித்தியாசமான செயல்கள் மற்றும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் நடத்தைகள் உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கும்.
மரகத கரப்பான் பூச்சி குளவி என்று அழைக்கப்படும் இந்த ஜுவல் குளவிகள் இதன் குறிப்பிடத்தக்க ஒரு நடத்தைக்காக உயிரியலாளர்களை பிரம்மிக்க வைக்கிறது. முதல் பார்வையில் ‘இந்த உயிரினம் சிறியதாக உள்ளதே, அப்படி என்ன செய்யப் போகிறது?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், தன்னுடைய வாழ்வை உறுதிப்படுத்த அவை செய்யும் தந்திரமான செயல்கள் மற்ற குளவிகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
இந்தக் குளவிகள் தன் இனத்தைப் பெருக்குவதற்கு நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வித்தியாசமான முறையைக் கையாளுகிறது. அதாவது, முதலில் இது கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்திற்குள் நுழைந்து, அதன் முட்டைகளை இடுவதற்குத் தகுந்த சரியான கரப்பான் பூச்சியை தேர்வு செய்கிறது.
அதற்கான சரியான கருப்பன் பூச்சியை அடையாளம் கண்டவுடன், அவற்றைக் கொல்வதற்கு பதிலாக, முதலில் அதை முடக்குவதற்கான விஷத்தை உடலில் செலுத்துகிறது. பின்னர் கரப்பான் பூச்சியின் மூளையில் தன்னுடைய விஷத்தை செலுத்தி கரப்பான் பூச்சியின் நடத்தையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.
பின்னர் கரப்பான் பூச்சியின் உடலுக்குள் தனது முட்டைகளை இட்டு இந்தக் குளவியின் முட்டைகளை அந்தக் கரப்பான் பூச்சி சுமக்கும்படி செய்கிறது. குளவி செலுத்திய விஷம் காரணமாக கரப்பான் பூச்சி அதற்கே தெரியாமல் குளவியால் கட்டுப்படுத்தப்படுகிறது. கரப்பான் பூச்சியின் உள்ளே இருக்கும் லார்வாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரப்பான் பூச்சியின் திசுக்களை தின்று வளர ஆரம்பிக்கும். அவை முழுமையாக வளரும் வரை அந்த கரப்பான் பூச்சியை கொல்லாமல் உள்ளிருந்தே தின்றுவரும்.
இறுதியில் அவை நன்கு வளர்ந்து பொறிக்கும் சமயத்தில்தான் கரப்பான் பூச்சியின் இருதயத்தைத் தின்னும். பின்னர் இறந்துபோன கரப்பான் பூச்சியின் உடலிலிருந்து வெளிவரும் சிறிய ஜுவல் குளவிகள், தனது வாழ்க்கையை இதேபோல மற்றொரு கரப்பான் பூச்சியை இரையாக மாற்றி வாழத் தொடங்கும்.
உண்மையிலேயே இந்த சிறிய ரக குளவிகளின் தந்திரமான வாழ்க்கை முறை, மற்ற பூச்சிகளில் இருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. மேலும் இதைப் பற்றி கேள்விப்படும் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.