
இந்தியாவின் நடப்பு காரீஃப் பருவத்தில் நெல் சாகுபடி உள்ளிட்ட அனைத்து வகைப் பயிர்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் விவசாய நலத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பிரதான தொழிலாக விவசாயம் பார்க்கப்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் பருவநிலை மாற்றத்தினால் இந்திய விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியப் பிரச்னையாக பார்க்கப்படுவது தண்ணீர் பற்றாக்குறை. மற்றும் சில பகுதிகளில் தேவையை விட பல மடங்கு அதிகமாக கொட்டி தீர்த்த மழையால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அனைத்து மாநிலங்களுமே விவசாயத்தில் மிகப்பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றன.
இந்தியாவில் நடப்பாண்டில் விளைச்சல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விலைவாசி உயர்வு மிக முக்கியப் பிரச்னையாக மாறியது. குறிப்பாக, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளின் விலையும் உயர்ந்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து ஓரளவு நிலைமை சீரடைந்தது. இதைத்தொடர்ந்து விளைச்சலை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டின் காரீஃப் பருவத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டது.
இந்த நிலையில், மத்திய வேளாண் விவசாய நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நடப்பாண்டு காரீஃப் பயிர் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை எட்டி இருக்கின்றது. குறிப்பாக, 2022ம் ஆண்டு 400.72 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 411.52 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. பயிர் வகைகளை பொறுத்தவரை நடப்பாண்டில் 172.57 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டது. சிறுதானியம் மற்றும் மோட்டா ரக பயிர் வகைகள் கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாகப் பயிரிடப்பட்டிருக்கிறது. எண்ணெய் வித்துப் பயிர்கள் 192.91 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பெயரிடப்பட்டுள்ளது. கரும்பு 59.91 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சணல் சாகுபடி 6.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. பருத்தி 123.42 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பாண்டில் காரீஃப் பருவத்தில் மட்டும் 1102.99 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன்மூலம் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.