நாம் இயற்கையோடு இணைந்து வாழாமல் கெமிக்கலையும் செயற்கையான பொருட்களையும் பயன்படுத்தி நமக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கிறோம். அன்றாடம் பயன்படுத்தும் சிலவற்றில் நாம் கவனம் செலுத்தினால் போதும், அதுவே நாம் இயற்கைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல காரியம். எல்லோரும் மாற வேண்டாம்; முதலில் நாம் மாறுவோம்; நம் மாற்றத்தின் நன்மைகளை பிறருக்கு கூறினால் அவர்களும் தன்னால் மாறிவிடுவார்கள்.
இயற்கைக்கு பாதகம் இல்லாமல் சாதகமாக கீழ்க்கண்ட 5 நாம் கடைப்பிடித்து இயற்கையை பாதுகாப்போம்.
நாம் இப்போது பிளாஸ்டிக்களால் ஆன தூத் பிரஷ்களை பயன்படுத்தி வருகிறோம். இவற்றை பயன்படுத்திய பிறகு தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது நமது மண்ணுக்கு எவ்வளவு ஆபத்தானது என்று நாம் உணர்வதில்லை. பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்ல பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களும் கூட ஆபத்தானவை தான். எனவே பிளாஸ்டிக்கால் ஆன டூத் பிரஷ்களை தவிர்த்து, மூங்கில் டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம். இதுவும் நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ்களை போல தரமானவை தான். இயற்கை விரும்பிகளாக இருந்தால் நீங்கள் வேப்பங்குச்சிகளையும், ஆலமரக்குச்சிகளையும் நாடலாம்.
பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழல் மட்டுமல்ல நமக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களில் தூசிகள் படிந்து இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவற்றை அப்படியே நாம் பயன்படுத்தும் போது அந்த தூசிகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இவையும் மக்கும் தன்மை அற்றவை என்பதால் விலங்குகள், தாவரங்கள் என அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நாம் அன்றாடம் பாத்திரம் கழுவதற்கு, குளிப்பதற்கு என பயன்படுத்தும் நார்கள் ஆபத்தானவை. இவற்றை பயன்படுத்திய பிறகு நாம் எளிதில் தூக்கி வீசிவிடுகிறோம். இவை மக்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடியவை. இதற்கு மாற்றாக தேங்காய் நார்களை பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் விதவிதமான வடிவங்களில், கைக்கு அடக்கமான தேங்காய் நார்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
சந்தைகளில் விதவிதமாக கிடைக்கக்கூடிய சோப்புகளில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கிறார்கள் என்றே தெரியாமல், நிறத்திற்கும், நறுமணத்திற்கும் ஆசைப்பட்டு வாங்கி விடுகிறோம். அது நமது சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையா என்பதை குறித்து நாம் கவலைப்படுவதில்லை. நாம் தினமும் பயன்படுத்தும் இந்த சோப்பு கெமிக்கல் கலக்காத சோப்புகளாக இருப்பது நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அது மட்டுமல்லாமல் கெமிக்கல் கலந்த சோப்புகளை நாம் பயன்படுத்தும் போது, நமது நிலத்தடி நீர், ஏரிகள் போன்றவற்றில் கலந்து அவற்றையும் மாசுபடுத்துகின்றன. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. எனவே கெமிக்கல் கலக்காத இயற்கை பொருட்களினால் தயாரிக்கப்படும் சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
அரசாங்கம் எவ்வளவுதான் வலியுறுத்தினாலும் பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை எளிதில் மக்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுவதற்கு காரணமாகிறது. ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள்ஆகும். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டுமென்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்தியபடி துணி பைகளை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.