சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வீடுகளின் பின்புறத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான திறந்தவெளிகள் இருந்தன. வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்திய காய்கறிக் கழிவுகள், அசைவக் கழிவுகள் முதலானவை தோட்டங்களில் கொட்டப்படும். காய்கறிக் கழிவுகள் மக்கி மண்ணுக்கு உரமாகும். இறைச்சிக் கழிவுகளை காகம், பூனை, கோழி முதலான உயிரினங்கள் சாப்பிட்டு விடும். ஒவ்வொரு தெருவின் முனையிலும் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் நிறையும் குப்பைகள் மற்றும் கழிவுகள் தினந்தோறும் பணியாளர்களால் சுத்தம் செய்யப்படும்.
அக்காலத்தில் மளிகைக் கடைகளில் பழைய செய்தித்தாள்களில் மளிகைப் பொருட்களை மடித்துத் தருவது வழக்கம். பெரிய அளவிலான பொட்டலங்களை சணல் கயிறு கொண்டு கட்டித் தருவார்கள். ஓட்டல்களில் உணவுகளை பார்சல் செய்ய மந்தார இலை பயன்படுத்தப்படும். எண்ணெய் முதலானவற்றை வாங்க வீட்டிலிருந்தே அலுமினியம் மற்றும் பித்தளைத் தூக்குகளைக் கொண்டு செல்வது வழக்கம்.
நான் ஏன் இதையெல்லாம் விவரிக்கிறேன் என்றால் அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களுமே மக்கக்கூடிய தன்மை உடையனவாக இருந்தன. பழைய செய்தித்தாள்கள், சணல்கள், மந்தாரை இலை முதலான பொருட்கள் எளிதில் மக்கி விடும். இவை பூமியில் புதைந்தாலும் மண்ணை பாழாக்காத பொருட்களே.
தொண்ணூறுகளுக்குப் பின்னர் மளிகைக்கடைகளில் பாலிதீன் பைகளில் பருப்பு முதலான சமையல் பொருட்களை நிரப்பி அடுக்கி வைத்து விற்பனை செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர் மக்காத வரம் பெற்ற பிளாஸ்டிக் கவர்கள், பாலீதின் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் மற்றும் வாட்டர் பாக்கெட்டுகள் என நமது வாழ்க்கை பிளாஸ்டிக்கோடு ஒன்றிப்போயின.
எண்பதுகளில் மக்கள் கடைக்குச் சென்றால் துணிப்பைகளைச் கொண்டு செல்லும் வழக்கம் கட்டாயம் கடைபிடிக்கப்பட்டது. துணிக்கடைகளில் துணி எடுத்தால் அதை துணிப்பைகளில் போட்டுத் தரும் வழக்கம் இருந்தது. தற்காலத்தில் எல்லாமே பிளாஸ்டிக் மயமாகிவிட்டன. இதையெல்லாம் மிஞ்சும் விதமாக தற்காலத்தில் டீக்கடைகளில் பார்சல் டீயை பிளாஸ்டிக் கவர்களில் ஊற்றி உடன் நான்கைந்து பேப்பர் கப்புகளைத் தந்து அனுப்பும் வழக்கத்தைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது.
கடைக்குப் போகப்போகிறோம் என்று தெரிந்தாலும், ‘நாம் கடையில் கேரிபேக்குகளை வாங்கிக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தில் கைவீசிக் கொண்டு செல்லும் மனநிலை நமக்கு உண்டாகிவிட்டது. நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை விளைவிக்கிறது என்பதை நாம் சற்று இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்காத் தன்மை கொண்ட பிளாஸ்டிக் மண்ணோடு மண்ணாகக் கலந்து மக்க இயலாத காரணத்தினால் மண்ணின் தரத்தை பாழாக்குகிறது. சாக்கடைகளில் அடைத்துக் கொண்டு தண்ணீரை செல்லாமல் தடுத்து சுற்றுப்புறத்தை மாசடையச் செய்து உடல் நலக் கேடுகளை விளைவிக்கிறது. இதனால் சிறு மழை பெய்தால் கூட தெருக்களில் சாக்கடைத் தண்ணீர் ஓடி நமது சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
தற்போதைய சூழலில் நம்மால் பிளாஸ்டிக்கை நூறு சதம் தவிர்க்க இயலாது. ஆனால், முடிந்த வரை பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை நம்மால் நிச்சயம் வெகுவாகக் குறைக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய வழி நமது இரு சக்கர வாகனங்களில் எப்போதும் இரண்டு மூன்று அளவில் துணிப்பைகளை வைத்துக் கொண்டு முடிந்தபோதெல்லாம் பயன்படுத்த வேண்டும். துணிப்பைகளை எடுத்துச் செல்வதற்கு கூச்சப்பட வேண்டாம்.
நாம் வாழும் இந்த பூமியை சுத்தமாக வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். துணிப்பைகளை பெருமையாக சுமந்து செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் சிலர் மனம் மாறி தாங்களும் துணிப்பைகளை பயன்படுத்தத் தொடங்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு துணிப்பைகளின் உபயோகத்தை எடுத்துக் கூறுங்கள். சிறு வயதிலேயே அவர்கள் இதைப் பின்பற்றினால் பெரியவர்களானதும் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நமது பூமி நன்றாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.