Horticulture
Vallarai Spinach

இலாபம் ஈட்ட வல்லாரை கீரை பயிரிடலாம் வாங்க!

Published on

விவசாயத்தில் குறுகிய காலப் பயிர்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. இதில் முக்கியமானவை கீரைகள். ஏனெனில் ஒருமுறை விதைத்து விட்டால் மூன்றே மாதத்தில் அறுவடைக்குத் தயாராகி விடும். அதுவும் பலமுறை அறுவடை செய்யலாம் என்பது கீரையின் தனிச்சிறப்பு. குறுகிய காலத்திலேயே நல்ல இலாபம் கிடைக்கும் கீரை விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப விதைப்பது நல்லது. கீரைகள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் என்பதால், மக்கள் மத்தியிலும் கீரைக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வகையில் நாம் இப்போது காணவிருப்பது வல்லாரை கீரையை எப்படி பயிரிட வேண்டும் என்பதைத் தான்.

மூலிகை வகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் வல்லாரை கீரையின் தாயகம் இந்தியா, இந்தோனேஷியா, சீனா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியனவாகும். ஞாபக சக்திக்கு மிகச்சிறந்தது என மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் வல்லாரை கீரை, சந்தையிலும் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. விவசாயிகள் வல்லாரை கீரையைப் பயிரிடும் போது சில நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள்.

பயிரிடுவதற்கு ஏற்ற காலம்:

வல்லாரை கீரை சாகுபடிக்கு மிகவும் ஏற்ற மாதம் அக்டோபர். நிழலான பகுதிகள் மற்றும் மிதமான காலநிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டது வல்லாரை. 50% நிழலில் வல்லாரை அதிகமாக வளரும் என்பதால், மகசூல் அதிகளவில் கிடைக்கும்.

நிலம்:

நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஈரப்பதமான சதுப்பு நிலங்களில் வல்லாரை கீரை நன்றாக வளரும். உவர் மண் மற்றும் அமில மண்ணிலும் நன்றாக வளரும் தன்மை வல்லாரைக்கு உண்டு. ஈரப்பதம் மிகுந்த, அங்ககத் தன்மை கொண்டுள்ள களிமண்ணிலும் வளரும்.

நடவு முறை:

கணுக்கள் கொண்ட தண்டுத் துண்டுகளின் மூலம் வல்லாரை இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு ஹெக்டேருக்கு வல்லாரை கீரையைப் பயிரிட வேண்டுமெனில், சுமார் 1 இலட்சம் எண்ணிக்கையில் தாவரத்தின் தண்டுகள் தேவைப்படும். தேவைப்படும் அளவில் படுக்கைகளை அமைத்து, இந்தத் தண்டுகளை நடவு செய்ய வேண்டும். பிறகு, வேர்கள் மண்ணில் நன்கு பிடிப்பதற்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனம்:

வல்லாரை நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியமாகும். கீரைகள் நன்றாக வளரும் வரை 4 முதல் 6 நாட்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பிறகு பயிர்களின் தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

இதையும் படியுங்கள்:
பாம்புக்கடியில் இருந்து தப்பிக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
Horticulture

உரம் தெளித்தல்:

ஒரு ஹெக்டேர் கீரைகளுக்கு 100கிகி தழைச்சத்து, 60கிகி மணிச்சத்து மற்றும் 60கிகி சாம்பல் சத்து ஆகியவற்றைக் கொடுக்கக் கூடிய உரங்களை இடுதல் வேண்டும். இந்த உரங்களையே இரண்டாகப் பிரித்து இரண்டு முறையும் இடலாம்.

நன்றாக வளர்ந்த பிறகு 3 மாதத்தில் வல்லாரை கீரையை அறுவடையை செய்யலாம்‌. இந்தக் கீரைக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் நல்ல விலைக்கு போகும். பொதுவாக விவசாயிகள் கீரைகளை வியாபாரிகளுக்கு விற்பது வழக்கம். இருப்பினும், முடிந்த வரையில் விவசாயிகளே நேரடி விற்பனையை மேற்கொண்டால் நல்ல இலாபம் கிடைக்கும். பல விவசாயிகள் நட்டத்தை சந்திப்பதற்கு முக்கிய காரணமே விற்பனைத் திறன் இல்லாததால் தான். ஆகையால், விவசாயிகள் விற்பனைத் திறனை மேம்படுத்திக் கொண்டால் நிச்சயமாக நல்ல இலாபம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com