என்னுயிர் நீதானே!
உன்னுயிர் நான்தானே!
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பங் காண்போமே!
என்பது நமது காதலர்களின் உற்சாகப் பாடல்
உன்னையறிந்தேன்! என்னைக் கொடுத்தேன்!
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்!
உன்னை நினைந்தே உலகில் இருந்தேன்!
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்!
என்பது பிரிவால் வாடும் நாயகனின் சோகத்தின் உச்சக் கட்டம்!
காதலனோ, காதலியோ காலத்தின் கோரத்தால் பிரிக்கப்படும்பொழுது, எங்கிருந்தாலும் வாழ்க... உன் இதயம் அமைதியில் வாழ்க என்ற புனிதம் போய், ரயிலின் முன்னால் தள்ளும் கொடூரம் அரங்கேறும் கொடிய காலம் இது! என்ன செய்ய?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டாம்பா நகருக்கு, வசந்த காலம் (Spring Season) ஒவ்வோர் ஆண்டின் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களே. அவ்வசந்த காலத்தில் மலர்கள் மலர்ந்து குலுங்குவதுடன் இதமான தட்ப வெப்பமும் நிலவும். சாதாரணமாகவே புளோரிடா மாகாணம் நமது சென்னை சீதோஷ்ணத்தை ஒத்தது என்பார்கள். பனிப் பொழிவு கொஞ்சமும் கிடையாது.
ஆனால் அடிக்கடி புயல்கள் வந்து பயமுறுத்தும். உலகத்தின் மிகப்பெரிய கடற்கரையான மியாமி இந்த மாகாணத்தில்தான் உள்ளது. நமது சென்னை மெரினா கடற்கரை இரண்டாவது பெரியது!
டாம்பாவில் ஸ்ப்ரிங் ஆரம்பித்ததும், எங்கு பார்த்தாலும் லவ் பக்ஸ் (Love Bugs) படையெடுக்கின்றன. நம்மூரில் மழைக்கு முன்னர் சில இடங்களில் ஈசல் என்றொரு பூச்சி, அதிக எண்ணிக்கையில் பறக்குமே, அதைப்போல. இந்த லவ் பக்கின், அதாவது காதல் பூச்சியின் விசேஷம் என்னவென்றால் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன; பறக்கும்போதும், அமரும்போதுங்கூட இணைபிரியாமல் இருக்கின்றன! இவ்வாறிருப்பதால் சாவிலும் இணைந்தேதானே இருக்க வேண்டும்? என்ன அருமையான உறவு!
இயற்கையின் படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்? அத்தனையையும் கண்டு ரசிக்க மனிதனைப் படைத்த இறைவனும்தான் எவ்வளவு மகத்தானவன்!
இதைப் போன்ற அபூர்வ பூச்சிகள் மேலும் இருக்கின்றனவா என்பதையும், அவ்வாறு இருந்தால் அவை உலகின் எந்தெந்தப் பகுதிகளில் உலா வருகின்றன என்பதையும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
வாழ்வில் ரசிக்க எத்தனையோ இருக்கின்றன! நாம்தான் இருப்பதை விட்டு விட்டு இல்லாதவற்றைத் தேடி எங்கெங்கோ அலைந்து, இன்பத்தை அடகு வைத்து விட்டு, அதற்கு அதிக வட்டியையும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
இனியாவது, இருப்பவற்றை ஏற்று, இயற்கையை ரசித்து, இன்பத்தைப் பெருக்குவோம்.