மண்ணின் சிரிப்பில் அடங்கியுள்ளது மனித குலத்தின் எதிர்காலம்!

மண்ணின் சிரிப்பில் அடங்கியுள்ளது மனித குலத்தின் எதிர்காலம்!
Published on

ரம்பத்தில் உழவரை மையமாகக் கொண்டு இயங்கிய வேளாண்மை அடுத்தடுத்து பயிரை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. பயிர்களைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு எது பலனளிக்கும் என்றே நாம் பார்க்கப் பழகி விட்டோம். அதனால் மண்ணைப் பற்றி யோசிக்கக்கூட முடியாமல் திணறி விட்டோம்.

மனிதர்கள் அறுவை சிகிச்சை முடிந்து எப்படி ஓய்வெடுப்போமோ அப்படித்தான் நம் முன்னோர்கள் மண்ணுக்கும் ஓய்வு கொடுத்தார்கள். அதன் மூலம் இழந்த மண்ணின் சத்துக்களை மீட்டார்கள். ஆதலால்தான் முன்பெல்லாம் நெல்லுக்கு அடுத்து நிலக்கடலையை பயிரிடுவார்கள். ஏனெனில், நிலக்கடலையின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியாவானது தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். அடுத்த சீசனுக்கு மீண்டும் நெல்லுக்கு போவார்கள்.

மண்ணுக்கும் மனிதன் போல் உயிர் உண்டு. மனிதனுக்கு உயிர் உண்டு என்றும் காற்றுக்கு உயிர் இல்லை என்றும் அறிவியல் சொல்கிறது. ஆனால், உயிர் காற்றான ஆக்ஸிஜன் உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் உயிரற்ற சடமாகி விடுகிறான். அதேபோல், தண்ணீருக்கு உயிர் இல்லை என்று சொல்லும் அறிவியல் தண்ணீர் முழுவதுமாக உடலை விட்டு வெளியேறினால் மனிதன் இறக்க நேரிடும் என்பதை ஒப்புக்கொள்கிறது.

ஒரு நாய் இறந்து விடுகிறது. அது மண்ணுக்கு மேலே இருந்தால் அழுகி நாற்றம் எடுக்கத் தொடங்கி விடும். அதை இரண்டு அடி குழி வெட்டி மண்ணில் புதைத்தால் நாற்றம் எடுப்பதில்லை. ஏனெனில் அது மட்கி விடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்தான் அதை மட்கச் செய்கின்றன. இதே போல் மனிதனின் உடலிலும் நுண்ணுயிரிகள்தான் நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்கின்றன. அப்படியானால் நமக்கு ஜீரண மண்டலம் இருப்பதைப் போல மண்ணுக்கும் ஜீரண மண்டலம் உள்ளது என்றுதானே அர்த்தம்.

மண்ணின் உற்பத்தித் திறனை கணிக்க அதில் எவ்வளவு ஆக்சிஜன் உள்ளே சென்று எவ்வளவு கார்பன் டை-ஆக்சைடு வெளியே வருகிறது என்று கணிப்பார்கள். ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை பெறுகிறது எனில் மண் சுவாசிக்கிறது என்றுதானே அர்த்தம். மண்ணுக்கு சுவாச மண்டலமும் உண்டு.

ஒருவருக்கு காலில் அடுபடுகிறது என்றால் மாத்திரையை வாயில் போட்டு விழுங்குகிறோம். வாயில் போடுகிற மாத்திரை எப்படி காலில் உள்ள ரணத்தை குணமாக்குகிறதோ அதேபோல் நாம் செடிக்கு போடும் எருவு, பாய்ச்சும் தண்ணீர் ஆகியவற்றை வேருக்கு கொடுப்பதில்லை. மண்ணுக்குதான் கொடுக்கிறோம். மண்ணுக்குக் கொடுக்கும் சத்துக்கள் வேரை சென்றடைகின்றன. அப்படியானால் மண்ணுக்குள்ளும் உயிரோட்ட மண்டலம் உண்டு என்றுதானே அர்த்தம்.

சிறு வயதில் ஆசிரியர்களிடம் ஒரு விரலை காட்டிவிட்டு நாம் சிறுநீர் கழிக்க ஓடுவோம். சிறுநீர் மூலம் நம் உடல் தேவையற்ற உப்புகளை வெளியேற்றுகிறது. அதைப்போலவே மண்ணும் உப்புகளை வெளியே தள்ளுகிறது. அதனால்தான் உப்பு படிவுகளை மண்ணில் நாம் பார்க்க முடிகிறது.

மனிதன் இனவிருத்தி செய்கிறான். சோதனைக் குழாயில் கருமுட்டையுடன் விந்தணுக்களை சேர்க்கலாம். ஆனால், கரு வளர தாயின் கருப்பை தேவை. இப்படித்தான் திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தில் வளர்ந்த செடியை கூட மண்ணில் வைத்துதான் வளர்க்க முடியும். தாயின் கருப்பை கருவை குழந்தையாக்குகிறது. அதேபோல், மண்ணோ செடியை மரம் ஆக்குகிறது. அப்படியானால் மண் இனவிருத்தி செய்கிறது என்றுதானே அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
கர்ம வினைகளைக் களையும் காயத்ரி மந்திர மகிமை!
மண்ணின் சிரிப்பில் அடங்கியுள்ளது மனித குலத்தின் எதிர்காலம்!

ஆசிரியர் ஒரு மாணவனை திட்டும்போது, ‘‘உனக்கு மண்டையில் ‘களிமண்’தான் இருக்கிறது" என்றுதான் பெரும்பாலும் திட்டுவார். அது உண்மையான கூற்றுதான். ஏனென்றால், மண்ணுக்கு இறந்த ஒரு நாயை மட்க வைக்க வேண்டும் என்றும், விதையை முளைக்க வைக்க வேண்டும் என்று தெரியும்போது மண்ணுக்கு அறிவும் மூளையும் இருப்பது உண்மைதான்.

உயிருள்ள எந்த ஜீவனையும் மருந்து கொடுத்து வளர்க்க முடியும்போது, மண்ணை நலமாக வைக்க உயிர் சத்துக்கள் கொடுக்க  வேண்டும். உயிர்க்கழிவுகளையும் எரு என்கிற உணவையும் மண்ணுக்குக் கொடுக்க அது நலமாக சிரிப்பதோடு நம்மை பார்த்து நட்புடன் சிரிக்கும். அந்த சிரிப்பில்தான் மனித குலத்தின்  எதிர்காலம் அடங்கியுள்ளது.

மனிதன் நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு மாறுவது போல், மண்ணையும் நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை முறை விவசாயத்தோடு ஒன்றிணைத்து வளம் காண்போம்.

- ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com