கடல் வரலாற்றில் வாழ்ந்த மிகவும் அச்சுறுத்தும் கவர்ச்சிகரமான உயிரினங்களில் ஒன்றுதான் மெகலோடன் சுறா. சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த பிரம்மாண்டமான கானாங்கெளுத்தி சுறா, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாகும். இது 60 அடி நீளம் வரை வளரக்கூடிய திறன் கொண்டது. இந்தப் பதிவில் இந்த பிரம்மாண்ட சுறாவின் சில சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
மெகலோடன் சுறாக்கள் தற்காலத்தில் உள்ள கிரேட் வெள்ளை சுறாக்களைவிட பல மடங்கு பெரியவை. சுமார் 20 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. அவற்றின் தாடைகள் 1.5 மீட்டர் அளவிலும், பற்கள் ஒவ்வொன்றும் நான்கு அங்குல அளவிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மிக தடிமனாகவும், கூர்மையாகவும் இருந்த இதன் பற்கள், இரையை துண்டித்து எலும்புகளைக் கூட நொறுக்கி துண்டாக்கும் பலம் வாய்ந்தவையாகும்.
இவற்றின் தோற்றம் பெரும்பாலும் சாம்பல் நிற உடல் மற்றும் வெள்ளை அடிவயிற்றுடன் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சில அறிவியலாளர்கள் இவற்றின் பின்புறத்தில் கோடுகள் அல்லது புள்ளிகள் இருக்கலாம் என நம்புகின்றனர். அந்த காலகட்டத்தில் மெகலோடன் சுறாக்கள் உச்ச வேட்டையாடும் விலங்காக இருந்து, கடல் உலகின் உணவுச் சங்கிலியில் முதல் இடத்தில் இருந்தன. திமிங்கலங்கள், டால்பின்கள், மீன்கள் மற்றும் பிற பெரிய கடல் வாழ் விலங்குகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்களை இவை இவை வேட்டையாடின.
அதன் சக்தி வாய் தாடைகள் மற்றும் கூர்மையான பற்கள் எப்பேர்ப்பட்ட இரையையும் துண்டித்து கொல்லும் தன்மை படைத்தவை. இவற்றால் கடலில் நீண்ட தூரத்திற்கு பயணித்து பரந்த அளவில் இரையைத் தேட முடியும். இந்த சுறாக்கள் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவற்றின் அழிவுக்கு காலநிலை மாற்றம், உணவுப் பற்றாக்குறை மற்றும் பெரிய வேட்டையாடும் விலங்குகளின் எழுச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
கடல் மட்ட மாற்றங்கள் மற்றும் குளிர்ச்சியான கடல் வெப்பநிலை இந்த பிரம்மாண்ட சுறாக்களுக்கு ஏற்ற வாழ்விடங்களை குறைத்து, அவற்றின் அழிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஒருவேளை இந்த சுறாக்கள் இப்போது அழியாமல் இருந்தால், கடல்களை ஆளும் அரசனாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.