
விவசாயத்தின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பு கருதப்படுகிறது. பசுமாடுகள் பால் கொடுப்பதன் மூலம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். அதோடு இவற்றின் சாண எரு இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரையிலும் கிராமங்களில் கைகளால் பால் கறப்பது தான் வழக்கம். ஆனால், இதனை எளிமையாக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட பால் கறக்கும் இயந்திரங்கள் பசுமாடுகளுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
பொதுவாக பால் உற்பத்தியாளர்கள், பசுமாடுகளின் மடியில் தண்ணீரைத் தெளித்து விட்டுத்தான் பால் கறப்பார்கள். பார்ப்பதற்கு வேண்டுமானால், இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் பால் கறப்பதும் ஒரு தனித்திறமை தான். ஏனெனில் மாடு தன் மடியில் எஜமானரைத் தவிர வேறு யாரையும் கை வைக்க அனுமதிக்காது. அதுவும் கன்றுக்குட்டியை பால் குடிக்க வைத்த பின் தான், பாலைக் கறக்க முடியும். மாடுகளின் மடிக்காம்பில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க சிலர் கைகளில் எண்ணெய் தடவிக் கொள்வார்கள். இந்த நடைமுறை தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலை நாடுகளில் பால் கறக்கும் இயந்திரங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதன் தாக்கம் சமீபத்திய ஆண்டுகளில் தான் இந்தியாவில் எதிரொலித்தது. ஓரிரு மாடுகளை வைத்திருப்பவர்கள் கைகளால் பாலைக் கறந்து கொள்ளலாம். ஆனால் பண்ணையில் அதிக பசுமாடுகள் இருக்கும் போது, கைகளால் பால் கறந்தால் அதிக நேரம் எடுக்கும். இந்த நேரத்தை மிச்சப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது தான் பால் கறக்கும் இயந்திரம்.
கைகளால் பால் கறக்கும் போது நம் கையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள், மாடுகளின் சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் மாடுகளின் மூலம் நமக்கு ஒவ்வாமையை ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், பால் கறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் சரும பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
வாக்குவம் பம்ப், டாங்க், கேஜ், ரெகுலேட்டர், மற்றும் ரப்பர் லைனர்கள் என பல பாகங்களைக் கொண்டுள்ளது பால் கறக்கும் இயந்திரம். மாடுகளின் மடியை மிருதுவாக, அதேசமயம் உறுதியாகவும் இந்த இயந்திரம் பிடித்துக் கொள்ளும். பேட்டரி மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இந்த இயந்திரம் வேலை செய்கிறது. ஆன்லைனில் ரூ5,000 முதல் ரூ.8,000 வரையில் பால் கறக்கும் இயந்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன்மூலம் அதிவிரைவாக பாலைக் கறந்து விடலாம். பால் கறந்து முடித்த பிறகு, சென்சாரின் உதவியுடன் இயந்திரம் பால் கறப்பதைத் தானாகவே நிறுத்தி விடும்.
இருப்பினும் இது இயந்திரம் என்பதால், பழுதடையவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பால் கறக்கும் இயந்திரம் பழுதடைந்தால், அது பசுமாட்டின் மடியைப் பாதிக்கவும் வாய்ப்புண்டு. ஆகையால் அடிக்கடி இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பண்ணைகளில் பால் கறக்கும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளிலும் பால் கறக்கும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
பசு மாடுகளை பண்ணையில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் கால்நடை வளர்ப்போருக்குத் தான், பால் கறக்கும் இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும். ஓரிரு மாடுகள் வைத்திருப்பவர்கள் கைகளால் பால் கறப்பதே நல்லது.