வாரந்தோறும் 30 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை! ஏன் தெரியுமா?

இரசாயன மருந்துகள் இல்லாமல், நன்மை தரும் பாக்டீரியாவை பயன்படுத்தி கொசுக்களின் நோய் பரப்பும் திறனை பலவீனப்படுத்தும் மெடேல்லின் நகரின் புதிய அறிவியல் முயற்சி.
mosquito-breeding-factory
mosquito-breeding-factory
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றில் வாரம்தோறும் 30 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்து வெளியே பறக்கவிடுகின்றனர். அது எங்கே, எதற்கு என்று தெரியுமா?

கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது உலக கொசு திட்ட (World Mosquito Program) அமைப்பின் ஆதரவுடன், டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா, எல்லோ ஃபீவர் போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்காக, இயற்கை முறையிலான 'வொல்பாக்கியா' (Wolbachia) என்றொரு வகை  பாக்ட்டீரியாவைப் பயன்படுத்தி கொசுக்களின் நோய் பரப்பும் திறனை குறைக்கும் நோக்கத்தில் கொலம்பியாவில் உள்ள மெடேல்லின் (Medellin) என்ற நகரத்தின் உட்பகுதியில் உலகிலேயே மிகப் பெரியதொரு தொழிற்சாலையை நிறுவி ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த தொழிற்சாலையிலிருந்து வாரம் தோறும் வொல்பாக்கியா பாக்டீரியாவுடன் கூடிய  30 மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்து  சுற்றியுள்ள வெளிப்புறத்தில் அவை பறக்கவிடப்படுகின்றன. அந்தக் கொசுக்களில் இணைந்திருக்கும் 'வொல்பாக்கியா' என்ற நன்மை தரும் பாக்ட்டீரியா, கொசுக்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க்கிருமிகளை (Virus) பலவீனப்படுத்தி டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா, எல்லோ ஃபீவர் போன்ற நோய் மனிதர்களுக்கு பரவாமலிருக்க உதவிபுரிகிறது.

இதற்கு விஞ்ஞானிகள் கொசுக்களின் மரபணுக்களில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை. ஆய்வுக் கூடங்களில், நோய் பரப்பும் கொசுக்களை உசிதமான உஷ்ண நிலையில், முட்டையிலிருந்து, லார்வா மற்றும் முழு வளர்ச்சியடைந்த கொசுவாகும் வரை கண்காணித்து வளர்க்கின்றனர். இந்த கொசுக்களிடம் உள்ள நோய் பரப்பும் வைரஸ்களின் வீரியத்தை குறைக்க வொல்பாக்கியா பாக்ட்டீரியாக்களை கொசு முட்டைக்குள் செலுத்திவிடுகின்றனர். அதிலிருந்து வளர்ந்து வெளியுலகில் பரவ விடப்படும் கொசுக்கள் உள்ளூர் கொசுக்களுடன் இனவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபடும்போது உற்பத்தியாகும் முட்டைகள் வொல்பாக்கியா பாக்டீரியா கலந்ததாகவே வருகின்றன.

அடுத்தடுத்த பரம்பரை இப்படியே வரும்போது நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறையவும், நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் வொல்பாக்கியா பாக்ட்டீரியா உள்ள கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்.

இதையும் படியுங்கள்:
1 ஆம் எண் புயல் முதல் 11 ஆம் எண் புயல் வரை... எச்சரிக்கை விடும் எண்கள்! தெரிஞ்சுக்கோங்க...
mosquito-breeding-factory

இந்த தொழிற்சாலை செயல்படுவதின் நோக்கமே இரசாயனப் பொருட்களின் உதவியால் ஒரு இனத்தை கொன்று அழிக்க முயலாமல் நோய் பரவலை தடுக்க உதவும் வழி முறைகளைப் பின்பற்றி அவற்றை வாழவைக்க உதவுவதேயாகும். 

வழக்கத்திற்கு மாறாக, மக்களின் ஆரோக்கியத்திற்காக  பாடுபடும் பணியின் ஒரு பகுதியாக, உலகத்திலேயே மிகப் பெரியதானதொரு தொழிற்சாலை கொசுக்களை மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்து வெளியில் விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கேட்கும்போது வியப்பாக இருக்கும்.

இவர்களின் இந்த ப்ராஜெக்ட் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரசாயன பயன்பாடின்றி உயிரியல் மூலம், உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களுக்கு எதிராக, விஞ்ஞானிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சிறப்பானதே என்று கூறலாம். நோய்களை கட்டுப்படுத்தும் அறிவியல் ஆராய்ச்சி இது என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

இந்த ப்ராஜெக்ட்டின் விளைவாக, மருத்துவமனைகளில், கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்ற தகவலும் வந்துகொண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com