எவரெஸ்ட் சிகரத்தை அச்சுறுத்தும் மனிதக் கழிவுகள்!

Mount Everest becomes a garbage dump!
Mount Everest becomes a garbage dump!https://www.polimernews.com

‘உலகிலேயே மிகவும் உயரமான குப்பைக் கிடங்காக எவரெஸ்ட் மலை மாறி வருகிறது’ என விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும்  உயரமான சிகரம் என்ற பெருமையை உடையது எவரெஸ்ட் மலை. ஆனால், சமீப காலமாக மனிதர்களால் எவரெஸ்ட் சிகரமே சிக்கலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தையொட்டி மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த மலை உச்சியை அடையச் செல்வார்கள். இவ்வாறு சுற்றுலாவிற்காக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், வந்து செல்பவர்களின் எண்ணிக்கையை விட, அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளின் டன் கணக்குகள் அதிகமாகியுள்ளது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை: எவரெஸ்ட் மலையின், ‘பேஸ் கேம்ப்’ என்ற இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் 900 முதல் 1000 டன் அளவிலான குப்பைகள் புதைக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சராசரியாகவே ஒவ்வொரு பருவத்திலும் 75 டன் குப்பைகள் வெளியேற்றப்படும் நிலையில், 50 டன் குப்பைகள் மலையின் உச்சிப் பகுதியிலேயே சேர்ந்துவிடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் பெருகிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் எவரெஸ்ட் சிகரமே அச்சுறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

கழிவுகள் பெருகிய சிகரம்: ஒவ்வொரு ஆண்டும் மலை ஏறும் மக்கள் இளைப்பாறத் தங்குவதற்கு ஏதுவாக ஆங்காங்கே குடில் அமைத்துக்கொள்வார்கள். அப்படி அவர்கள் தங்கிச் சென்ற இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், நெகிழி பாட்டில்கள், உணவுக் கழிவுகள், பொட்டலங்கள், கயிறுகள், நெகிழி பைகள் என  அவர்கள் பயன்படுத்திய பொருட்களை  அப்படியே விட்டுச் சென்றுவிடுகின்றனர். இவை அனைத்தும் கழிவுகளாக மாறி நிற்கின்றது. மேலும், பலத்த காற்று வீசுவதன் காரணமாக அமைக்கப்பட்ட குடிகள் பறந்து பின் அதுவும்கூட கழிவுகளாக மாறுகின்றன.

அதுமட்டுமின்றி, மலை ஏறும் மக்கள் தங்களுடைய கழிவுகளை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் கழிவறைகளைப் பயன்படுத்துவதைத்  தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக பனியிலேயே குழி தோண்டி அதில் மலம் கழித்துவிட்டு, அதன் மேல் பனியைக் கொட்டி மூடி விடுகின்றனர். இந்தப் பனிக்கட்டிகள் கரைந்து வழிந்தோடும்போது மலமும் அதோடு கலந்து வழிந்தோடுகிறது. மலைச் சரிவுகளுக்குக் கீழ் வாழும் மக்கள் இந்த மனிதக் கழிவுகள் கலந்து வழிந்தோடும் நீரைத்தான் தங்களுடைய வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல கொடிய நோய்களும் ஏற்படுகின்றன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மலை ஏறும் வீரர்கள் ஆவேசம்: எவரெஸ்ட் மலையை அடையும் வீரர்களில் சிலர் அங்குள்ள இந்த அவல நிலைமையை வீடியோவாக தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். கழிவுகளின் பெருக்கம் அதிகமாக இருப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் இதற்கு நேபாள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வலியே நம்மை வலிமையாக்கும் என்பதை உணர்வோம்!
Mount Everest becomes a garbage dump!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், ‘லூக் போய்ஸ்நார்ட்’ என்பவரின் தலைமையில் பத்து மலையேற்ற வீரர்கள் கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே 12 மைல்கள் தொலைவில் உள்ள பகுதிகளில் 3.7 டன் குப்பைகளை அகற்றினர். பின்னர்  அவர், “எவரெஸ்ட் பகுதிகளில் குவியும் குப்பைக் கழிவுகளில் 45 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். இமயமலையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

நேபாள அரசின் நடவடிக்கை: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 3,29,993 வசூலிக்கப்படுகிறது. ‘எவரெஸ்டில் ஏறும் வீரர் பயன்படுத்தும் பொருட்களில் 8 கிலோ கழிவுகளை கீழே கொண்டு வந்தால் அவர்களது கட்டணம் திருப்பி அளிக்கப்படும்’ என்ற அறிவிப்பை நேபாள அரசு  வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இமயமலையில் குப்பைகள் குவிவதைத் தடுக்க முயற்சி செய்து வருவதாகவும் நேபாள அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டு கூறியிருந்தனர். ஆனால், தற்போதும் கூட அதே  நிலையானது தொடர்கிறது. நேபாள அரசால் கடந்த சில ஆண்டுகளாகவே எவரெஸ்ட் மலையில் குவியும் கழிவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாதது ஒரு வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com