

சீனாவின் குய்சோ (Guizhou) மாகாணத்தில் உள்ள குலு சாய் (Gulu Zhai) கிராமத்தில் உள்ள சான் டா யா (Chan Da Ya) மலை ஒவ்வொரு 30 வருடங்களுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுகிறது. இந்தக் குன்று 9 அடி உயரமும் 65 அடி நீளமும் உள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த மலைப்பாறை இரண்டு விதமான பாறைகளால் ஆனதாகவும், மென்மையான சுண்ணாம்புப் பாறை மற்றும் கடினமான பாறை அடுக்குகள் கலந்து காணப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்பட்டு, அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் இருப்பதாகவும் கண்டறிந்தனர். அந்த மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு உள்ளே இருக்கும் கடினமான முட்டை கற்கள் வெளிப்பட்டு கடைசியில் பாறையில் இருந்து பிரிந்து கீழே விழுகின்றன. ஒரு கல் முழுமையாக வெளிப்பட்டு வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகின்றன. இக்கற்கள் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன.
பாறையின் அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மலைக்கு அருகில் உள்ள குலு சாய் கிராமத்தில் வசிக்கும் 'ஷூய்' (Shui) பழங்குடியினரான உள்ளூர்வாசிகள் இந்தக் கற்களை அதிர்ஷ்டத்தின் சின்னங்களாகக் கருதுகின்றனர். இங்குள்ள குடும்பம் ஒவ்வொன்றும் இந்தக் கல் முட்டைகளை வைத்திருக்கின்றன. இவை அவர்களைக் காக்கும் புனிதப் பொருளாகக் கருதி பல குடும்பங்கள் இந்த கற்களை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இது தலைமுறை தலைமுறையாக அங்கு பின்பற்றப்படுகிறது.
இவை வீடுகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்தக் கல் முட்டைகள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்றும், இவை பேலியோசோயிக் சகாப்தத்தின் கேம்ப்ரியன் (Cambrian Period) காலத்தை சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுற்றியுள்ள பாறையின் அரிப்பு காரணத்தால் இந்த கல் முட்டைகள் ஒவ்வொரு 30 வருடங்களுக்கு ஒருமுறை விழுகின்றன. பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுவதால் கல் முட்டைகள் மேற்பரப்பில் வந்து விழுகின்றன. சான் டா யா மலை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்குள்ள அதிசயக் கற்களைக் காணவும், அங்குள்ள மக்களின் கலாசாரத்தை பற்றி அறியவும் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகை தருகின்றனர்.
குய்சோ அரசு இப்போது இந்த இடத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, ஆராய்ச்சி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சுற்றுலா அதிகரிப்பால் இந்த இயற்கை அற்புதத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.