

உடும்பு (Monitor lizard) பல்லி இனத்தை சார்ந்த ஊர்வன உயிரினமாகும். ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இவற்றை காண முடியும். இவை நீண்ட கழுத்தையும், வலிமையான வாலையும், கூர்மையான நகங்களை கொண்டிருக்கும். இத்தகைய தனித்துவம் வாய்ந்த உடும்பு தன் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள தன்னுடைய வாலை ஒரு சாட்டைப்போல சுழற்றி அடிக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கும்.
பல ஊர்வன வகைகள் தன்னுடைய வாலை பாதுகாப்பிற்காக பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு பல்லிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் தன்னுடைய வாலை வெட்டிப் போட்டுவிட்டு போய்விடும். இதைப்போல பல ஊர்வன வகைகள் தன்னுடைய வாலை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளும்.
உலகத்தில் நிறைய உடும்பு வகைகள் இருக்கின்றன. உடும்புகளின் வால்பகுதி நிறைய தசைகளால் ஆனதாக இருக்கும். அது ஆரம்பிக்கும் போது மொத்தமாக ஆரம்பித்து முடிவில் மெல்லிதான அமைப்பை கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒரு சாட்டையை போலவே இருக்கும். அந்த வாலை காற்றில் உடும்பு வேகமாக சுழற்றும்.
இப்போது அதற்கு ஏதேனும் ஆபத்து வருகிறது. ஏதேனும் விலங்கு அதை பிடிக்க போகிறது என்றால், உடனே அதன் பின்பக்கத்தை காட்டி காற்றில் வேகமாக வாலை சாட்டைப்போல சுழற்றும். அந்த வாலின் முனைப்பகுதி விலங்கு மேலே பட்டால் சாட்டையால் அடிவாங்கியது போல கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த வலியை அனுபவித்த வேட்டையாடும் உயிரினம் அதற்கு பிறகு உடும்பு அருகிலேயே நெருங்காது.
அதனால் உடும்புகளுக்கு அதன் வால் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சம். அந்த வாலுடன் சேர்த்து கூரிய நகங்களும், நல்ல கூர்மையான பற்களும் இருப்பதால், எதிரிகளிடமிருந்து இதை பயன்படுத்தி தப்பித்துவிடும்.
இதைப் போலவே வாலை பயன்படுத்தி எதிரிகளை தாங்கிய உயிரினம் ஒன்று அந்தக் காலத்திலே வாழ்ந்திருக்கிறது. இப்போது அழிந்துவிட்டது. அது வேறு எதுவுமில்லை Ankylosaurus என்று சொல்லக்கூடிய டைனோசர் தான். அதுவுமே அதை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க அதனுடைய பெரிய வாலை அதன் முனையில் சுத்தியல் போன்ற ஒரு அமைப்பை கொண்டிருக்கும். அந்த வாலை பயன்படுத்தி தாக்க வரும் உயிரினத்தை இது தாக்கும்.
தமிழில் 'உடும்புப்பிடி' என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். அதாவது உடும்பு சுவற்றில் ஏறும்போதும் அல்லது ஏதாவது உயிரினத்தை பிடிக்கும் போதும் தளராமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். இதைப் போலவே நாம் ஒரு விஷயத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை சொல்வதற்கு உடும்புப்பிடி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.