விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் போதிய இடமில்லை என வருத்தப்படுபவரா நீங்கள்? மாடித் தோட்டத்தைப் போலவே உங்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் செங்குத்து தோட்டம். மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
விவசாயம் செய்ய எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் இலாபம் கிடைக்காது என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால், புதிய தலைமுறை விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. கிராமங்களில் விவசாயம் செய்வதற்கான சூழல் பெருமளவு நன்றாகவே இருக்கும். ஆனால் நகரத்தில் அப்படி இருக்காது. அடுக்குமாடி குடியிருப்புகள் நகர வாசலை பெருமளவு ஆக்கிரமித்து விட்டன. இருப்பினும் நகர வாசிகளுக்கும் விவசாய உணர்வைத் தந்தது மாடித் தோட்டம் தான்.
மாடித் தோட்டத்தின் அருமை புரிந்த பின், சென்னை உள்ளிட்ட பல நகரங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டு மொட்டை மாடியில் தங்களால் முடிந்த அளவிற்கு காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்ததும், மானிய விலையில் விதைகளும் வழங்கப்பட்டன. மாடித் தோட்டத்திற்குப் பிறகு செங்குத்து தோட்டத்தையும் நாம் அறிய வேண்டிய நேரமிது. ஆம், நகரத்திலேயே இன்னும் கொஞ்சம் அதிகளவில் காய்கறிகளை விளைவிக்க எண்ணினால் உங்களுக்கு செங்குத்து தோட்டம் கைகொடுக்கும்.
குறைந்த இடத்திலேயே அதிகளவு காய்கறிகள் மற்றும் பூச்செடிகளை வளர்த்து நஞ்சில்லா காய்கறிகளைப் பெற செங்குத்து தோட்டம் உதவுகிறது. மேலும், இந்தத் தோட்டம் இருக்கும் இடத்தில் காற்றின் தரம் மேம்படும். கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி மற்றும் கீரைகள் செங்குத்து தோட்டத்திற்கு மிகவும் ஏற்ற காய்கறிப் பயிர்களாகும்.
அரசு மானியம்: மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் படி, செங்குத்து தோட்டம் அமைக்க 50% மானியம் கிடைக்கும். குறிப்பாக பெருநகரங்களில் ஒரு சதுர அடிக்கு 375 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 40 சதுர அடிகளுக்கு ரூ.15,000 கிடைக்கும். மானியம் பெற http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_newphp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தோட்டத்தின் கட்டமைப்பு: UV கதிர்வீச்சுப் பாதுகாப்பு கொண்ட MS பிரேம் செங்குத்து தட்டையின் அகலம் 25 மிமீ மற்றும் தடிமன் 3 மிமீ ஆக இருக்க வேண்டும். செடிகள் நன்றாக வளர 30 செமீ இடைவெளி விட வேண்டும்.
கிடைமட்ட கம்பி 3 மிமீ விட்டத்துடன், 15 செமீ இடைவெளியில் அமைக்க வேண்டும். தூள் பூசப்பட்ட ஸ்க்ருவின் அளவு 6 மிமீ, பிவிசி தொட்டியின் நீளம் 30 செமீ மற்றும் அகலம் 15 செமீ ஆக இருக்க வேண்டும். மொத்தம் 80 தொட்டிகள் தேவைப்படும்.
தேங்காய் நார் கழிவு 80%, செம்மண் 10%, மண்புழு உரம் 5%, பெரிலைட் 5% மற்றும் தேவையான அளவு இயற்கை உரங்களைக் கொண்டு செடிகளுக்கான வளர்ப்பு ஊடகத்தை தயார் செய்ய வேண்டும். தேர்வு செய்த காய்கறிகளின் விதைகளை இந்த மண்ணற்ற வளர்ப்பு ஊடகத்தில் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து முறையாக பராமரித்து வருவதன் மூலம் வெகு விரைவிலேயே நஞ்சற்ற காய்கறிகளை நம்மால் அறுவடை செய்ய முடியும்.