
உலகில் கிளி, குருவி, சேவல், கழுகு, மயில் போன்ற பல வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒருவித தனித்துவமான திறமை உண்டு. சில பறவைகள் ஆகாயத்தில் பல மைல் தூரம் தொடர்ந்து பறக்கக்கூடிய திறமை கொண்டிருக்கும். கிளிக்கு பேசும் திறன் உள்ளது. மயில் நடனமாடும்.
அதுபோல் உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய திறமை பெற்றுள்ளது ஆஸ்ட்ரிச் (Ostrich) என்ற பறவை. இது தரையில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
பரந்து விரிந்த புல்வெளிகளுடன் கூடிய சாவன்னா பகுதிகளில் ஓடுவதற்கு ஏதுவாக ஆஸ்ட்ரிச் விரல்களுடன் கூடிய இரண்டு நீண்ட வலுவான கால்களைக் கொண்டுள்ளது. வனப் பகுதிகளில், பிற மிருகங்களைக் கொன்று தின்னக்கூடிய நான்கு கால்கள் கொண்ட விலங்குகளிடமிருந்து கூட தப்பித்துவிடும் அளவுக்கு ஆஸ்ட்ரிச்களால் ஓட முடியும்.
சிங்கம், புலி போன்ற பலசாலி மிருகங்களைக்கூட, தன்னுடைய பலம் நிறைந்த வலுவான கால்களால், காயம் ஏற்படும் அளவுக்கு உதைத்துவிட்டு ஓடித் தப்பித்துவிடும் திறன்கொண்டது இப் பறவை.
பரந்து விரிந்து கிடக்கும் திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சாவன்னா பகுதிகளும் ஆஸ்ட்ரிச்கள் வசிக்கும் இடங்களாகும். ஆஸ்ட்ரிச்கள், பொதுவாக தன் துணையுடன் அல்லது சிறு குழுக்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றன.
ஆஸ்ட்ரிச் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (step) சுமார் 5 மீட்டர் நீளம் இருக்கும். இதன் காரணமாகவே அது வேகமாகவும் வெற்றிகரமாகவும் ஓடி, இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்க முடிகிறது.
ஆஸ்ட்ரிச்களின் மூளை அவைகளின் கண்களை விட சிறிய சைஸில் உள்ளன. இந்த அமைப்பு, எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு படுவேகமாக ஓட நேரும்போது பார்வைத் திறன் சிறப்புற்றிருப்பதற்காக உண்டானது என கூறப்படுகிறது. அதிக ஸ்பீடில் ஓடுவதற்கு இப் பறவைகளுக்கு இறக்கைகள் தேவையில்லையென்று தெரிகிறது.
ஓட்டப் பந்தயத்தில் ஆஸ்ட்ரிச்சை மிஞ்ச இதுவரை எந்தப் பறவையும் பிறந்து வரவில்லை என்பதே உண்மை. உலக ரெக்கார்ட்டை நிரந்தரமாக தன் வசம் வைத்துள்ள ஆஸ்ட்ரிச் ஓர் அபூர்வப் பறவை என்பதில் சந்தேகமில்லை.