

நியூசிலாந்தில் பெலோரஸ் ஜாக் (Pelorus jack) என்ற டால்பின் இருந்தது. அந்த டால்பின் 24 வருடங்களாக அங்கிருந்த பிரெஞ்ச் பாஸ் என்ற இடத்தில் கப்பல்கள் போவதற்கு வழிக்காட்டிக் கொண்டிருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
பிரெஞ்ச் பாஸ் என்னும் இடம் கொஞ்சம் ஆபத்தான இடம். அங்கே நிறைய பாறைகள் இருக்கும். அந்த வழியாக செல்லும் கப்பல்கள் பாறையில் மோதினால் கப்பலே கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
1888 காலக்கட்டத்தில் ஒரு கப்பல் கடலில் சென்றுக் கொண்டிருந்த போது அதிலிருந்த மக்கள் ஒரு டால்பினை பார்க்கிறார்கள். அந்த டால்பின் 4 அடி நீளமான Rissos dolphin. அந்த டால்பின் முதலில் அந்த கப்பலுக்கு முன்பாகவே நீந்தி சென்றுள்ளது. முதலில் பார்க்கும் போது யாருக்கும் ஏன் என்று புரியவில்லை. பிறகு தான் புரிந்திருக்கிறது அந்த டால்பின் கப்பலை பாதுகாப்பான வழியாக கூட்டி சென்றுள்ளது.
ஒரு வழியாக வரும் கப்பல்களை அடுத்த பக்கத்திற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு அந்தப் பக்கத்தில் இருக்கும் கப்பலை இந்தப்பக்கம் கொண்டு வந்துவிடும். இதுப்போலவே அந்த வழியாக போகிற எல்லா கப்பல்களுக்கும் இந்த டால்பின் உதவி செய்துள்ளது. இந்த டால்பின் எதற்காக தொடர்ந்து எல்லா கப்பல்களுக்கும் உதவுகிறது என்ற காரணம் யாருக்குமே தெரியவில்லை. இப்படி செய்வதற்கு அதற்கு யாரும் பயிற்சியும் தரவில்லை. அதுவே இதை தொடர்ந்து செய்ய தொடங்கியுள்ளது.
சில கப்பல்கள் இந்த டால்பினுக்காக காத்து இருந்து அது வந்ததும் பிரெஞ்ச் பாஸை கடந்து செல்லுமாம். இதனால் இந்த டால்பின் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதை பார்ப்பதற்காகவே நிறைய மக்கள் வந்திருக்கிறார்கள். அதுப்போல வந்த ஒருவன் 1904ல் இந்த டால்பினை சுட்டிருக்கிறான். இந்த டால்பினுக்கு அடிப்பட்டது. ஆனால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனால் இது மிக பெரிய பிரச்னையாகி நியூசிலாந்து அரசாங்கமே ஒரு சட்டம் கொண்டு வருகிறது. இந்த டால்பினை யாரும் துன்புறுத்தக் கூடாது என்று.
பிறகு தொடர்ந்து அடுத்த 8 வருடங்களுக்கு இந்த டால்பின் கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்தியது. ஆனால், ஒரு கப்பலில் இருந்து இந்த டால்பினை சுட்டார்கள் அல்லவா? அந்த கப்பலுக்கு மட்டும் உதவாதாம். அடுத்த ஐந்து வருடத்தில் அந்த பாதை வழியாக செல்லும் போது அந்த கப்பல் ஒரு பாறையில் மோதி உடைந்துவிட்டதாம்.
இந்த டால்பின் 24 வருடங்கள் மனிதர்களுக்கு உதவி செய்துள்ளது. 1912 ல் இயற்கையான காரணத்தால் அது இறந்து போகிறது. இதுப்போன்ற மிருகங்களின் செயல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துவதாக உள்ளன.
இதைப்பற்றி உங்கள் கருத்து?