

உலகில் அதிவேகமாக ஓடும் விலங்கு எது என்றால் சிறுத்தை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இயற்கை ஒவ்வொரு சூழலுக்கும் ஒரு வேகமான உயிரினத்தை தந்துள்ளது. வேகம் என்பது வெறும் கால்களை மட்டும் பொறுத்ததில்லை, இறக்கைகள் மற்றும் துடுப்புகளையும் பொறுத்தது. சிறுத்தைகளின் வேகத்தை விட அதிகமாக செல்லும் பெரிகிரைன் ஃபால்கன் (Peregrine Falcon) பற்றி இப்பதிவில் காண்போம்.
சிறுத்தையின் வேகத்தை விட ரெண்டு மடங்கு வேகம் கொண்ட இப்பறவை, வானில் இருந்து இரையை நோக்கி 240 மைல் வேகத்தில் செங்குத்தாக டைவ் அடித்து இரையைப் பிடிக்கிறது. உலகின் அதிவேகப் பறவையான இது செங்குத்தாக பாயக்கூடியது (stoop). உயரத்திலிருந்து இரையைத் தாக்கும்பொழுது அதன் வேகம் பிரம்மிக்க வைக்கும். இது காகம் அளவுள்ள பெரிய, சக்தி வாய்ந்த வேட்டையாடும் பறவையாகும்.
நீல - சாம்பல் நிற முதுகு, கருப்புத் தலை, வெள்ளை முகம், முகத்தில் மீசை போன்ற கருப்பு கோடுகள் மற்றும் மார்பில் கோடுகள், கூர்மையான அலகு மற்றும் நகங்கள் கொண்டது. இதன் கண்கள், கால்கள், அலகு போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவை உயர பறக்கும்பொழுது மோவாய், தொண்டை ஆகியவற்றின் மீது நெடுக்காக காணப்படும் கருப்புக் கோட்டை வைத்து இதனை எளிதில் அடையாளம் காணலாம்.
உயரமான கட்டடங்கள், மலைகள், கடற்கரைகள், நகரங்கள் என பலதரப்பட்ட இடங்களில் வாழ்கின்ற இவை, புறாக்கள், ஸ்டார்லிங்ஸ் போன்ற நடுத்தர அளவுள்ள பறவைகளையும், பாம்பு, எலி, வாத்து, நீர்ப்பறவை போன்றவற்றையும் பிடித்து உண்ணும் பறவையாக உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் 20ம் நூற்றாண்டில் இவை பாதிப்படைந்தாலும், அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாப்பு முயற்சிகளால் மீண்டு வந்துள்ளது. தமிழில், ‘பொரி வல்லூறு’ என அழைக்கப்படும் இவை நகர்ப்புறங்களில் உயரமான கட்டடங்களில் கூடுகட்டி வாழப் பழகி உள்ளன. பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட பெரியவை.
பொரி வல்லூறு அதன் வேகத்திற்கு புகழ் பெற்றது. தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி இதனுடைய அதி உச்ச வேகமான 389 km/h (242 mph) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பறவை இணையாக அல்லாமல் தனித்து திரியக்கூடியது. காலையிலும், அந்தி வேளையிலும் சுறுசுறுப்பாக வேட்டையாடும் இவை, நண்பகலில், வெயிலின்போது மரத்திலோ அல்லது மணலில், புதர்களின் நிழலிலோ காணப்படும்.
பொரி வல்லூறுகள் பெரும்பாலும் நீரில் வாழும் பறவைகளை விரும்பி வேட்டையாடும். காலின் பின் விரலால் இவை இரையை தூக்கிச் செல்கின்றன. கூர்மையான மஞ்சள் நிற நகங்கள் பறக்கும்போது மற்ற பறவைகளைப் பிடிக்க ஏதுவாக இருக்கின்றன. இவை அண்டார்டிகாவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும் காணப்படுகின்றன. பெண் வல்லூறுகள் 2 முதல் 5 முட்டைகள் வரை இடுகின்றன. 29 முதல் 32 நாட்கள் வரை அவற்றை அடைகாக்கின்றன. ஆண் பறவைகள் பகலில் முட்டைகளை அடைகாக்க உதவுகிறது. ஆனால், பெண் பறவைகள் மட்டுமே இரவில் அவற்றை அடைகாக்கும். முட்டைகள் வெள்ளை அல்லது பழுப்பு நிற அடையாளங்களுடன் இருக்கும்.