எங்கும், எதிலும், எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் மயம் என்ற பயன்பாட்டுப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட நாம், அதனால் சுற்றுச் சூழல் மாசடைவதை உணர்ந்தும் அதைத் தவிர்க்க முடியாதவர்களாகவே இருக்கிறோம்.
ஆமாம், காலையில் தூங்கி எழுந்ததும் வாசல் பையில் போடப்பட்டிருக்கும் பால் முதல் எல்லாவற்றிலுமே பிளாஸ்டிக் ஆதிக்கம்தானே?
தினசரி வாழ்க்கையில் நம் ஒவ்வொரு தேவைக்கும் பிளாஸ்டிக்கை நம்பித்தான் இருக்கிறது என்ற அனுபவம் நம்மை பயமுறுத்துகிறது.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் 1,596 கி.மீ. நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால், குப்பைகளாக மாற இருந்த 1,460 டன் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்களாக மாறின.
அப்போது வெளியான ஒரு செய்தி இதுதான்:
“சுற்றுச் சூழல் துறை, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,596 கி.மீ. நீளத்துக்கு ரூ.218 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தது. இதன் மூலம் குப்பைகளாக வீசப்பட்ட 1460 டன் பிளாஸ்டிக் பொருட்கள், சாலைகளாக மாறியுள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள், அனைத்து மாவட்டங்களிலிருந்தும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெறப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள், தார் சாலைகளை விட உறுதியாக உள்ளன. மழையாலோ, நீர்த் தேக்கத்தாலோ இவை சேதமடைவதில்லை. இந்த தொழில்நுட்பத்தை, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.வாசுதேவன் வழங்கினார்.’’ என்பதுதான் அந்த செய்தி.
சரி, இது எப்படி சாத்தியமாயிற்று?
2001-ம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதேசமயம் பெரும்பாலான வீடுகளில், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகளாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேண்டாம் என்று வெளியே வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, பயன்படுத்த திரு வாசுதேவன் முயற்சி மேற்கொண்டார். முதலில் பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, சாலை போட பயன்படுத்தும் தாருடன் கலந்தார். அது வெற்றி பெறவில்லை. அதன் பிறகு, ஜல்லி கற்களை சூடாக்கி, பொடியாக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் கொட்டி, கற்களின் மீது பிளாஸ்டிக் பூச்சு கொடுத்தார். அந்த கற்களைக் கொண்டு, 2002-ல், தான் பணியாற்றிய கல்லூரியில் சாலை அமைத்தார். அதனைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வரின் ஒப்புதல்படி, கோவில்பட்டியிலும், சென்னையில் ஜம்புலிங்கம் தெரு, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளிலும் சில பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டன.
இந்தச் சாலைகளில், மழைநீர் ஊடுருவாததால், இவை மழை காலத்தில் சேதமடையாமலும், வழக்கமான தார் சாலையின் ஆயுட்காலத்தை விட நான்கு ஆண்டுகளுக்கும் கூடுதலாக உறுதியாக இருந்ததும் தெரிய வந்தன. மேலும் 1 கிலோ மீட்டர் சாலை அமைக்க 10 டன் தார் தேவைப்படும். பிளாஸ்டிக் சாலை அமைக்க, 9 டன் தார் மட்டுமே தேவைப்பட்டது. இதன் மூலம் ஒரு டன் தார் செலவு மிச்சமானது. அதனைத் தொடர்ந்து இந்த தொழில் நுட்பத்துக்கு காப்புரிமையும் பெற்றார் வாசுதேவன்.
இதன் பயன்பாட்டை உணர்ந்த தமிழக அரசு, அந்தத் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 1400 டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு சாலைகளை அமைத்துள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளாவது தவிர்க்கப்பட்டு, மறுசுழற்சி மூலம் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரிடமிருந்து 2018 ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார் வாசுதேவன். இந்த அங்கீகாரத்தை பிரதமர் மோடியும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.
இன்றுவரை, சென்னை, புதுச்சேரி, ஹிந்த்பூர் (ஆந்திரப் பிரதேசம்), கொல்கத்தா, கோவா, மும்பை, சிம்லா, திருவனந்தபுரம், வடகரா, கோழிக்கோடு, கொத்தமங்கலம் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில், வாசுதேவன் திட்டபடி பிளாஸ்டிக் சாலைகள் போடப்பட்டன.
நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட பிளாஸ்டிக்கைப் பிரியத்தான் வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நாம் வந்துவிட்டோம். சாலை அமைப்பது போன்ற பயனுள்ள மாற்று ஏற்பாடுகள் நகரெங்கும், ஊரெங்கும், கிராமங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டால் நாம் பெரிதும் மகிழலாம்.
ஆனால் வாசுதேவனின் யோசனையும், திட்டமும் ஏன் மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. சம்பிரதாயமான முறையில் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் நிர்ப்பந்தமாக இருக்குமோ?