கடல்வாழ் உயிரினங்களைக் கொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்!

கடல்வாழ் உயிரினங்களைக் கொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்!

லக நாடுகள் தற்போது சந்தித்து வரக்கூடிய மிக முக்கியமான பிரச்னை புவி வெப்பமடைதல். இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் கடலின் தன்மையில் மாற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற இயற்கை காரணிகளோடு, மனிதர்களால் ஏற்படக்கூடிய செயற்கை காரணிகளும் கடலின் தன்மையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடல் நீர் மாசுபடுவதில் மனிதர்களுடைய பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடலில் மனிதர்களால் கலக்கப்படும் பிளாஸ்டிக்கின் காரணமாக கடலின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, கடலில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள், மீன்கள், திமிங்கலங்கள், வந்து செல்லக்கூடிய பறவைகள் என்று அனைத்து வகையான கடல் வாழ் உயிரினங்களும் பெரியளவில் பாதிப்பை சந்திக்கின்றன. பல்வேறு உயிரினங்கள் பிளாஸ்டிக்கின் காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உணவு என்று எண்ணி உட்கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், பிளாஸ்டிக் பொருட்கள் நீண்ட நாட்கள் கடலில் இருக்கும் பட்சத்தில் அந்தக் கழிவுகளில் நுண்ணுயிரிகளின் படிமங்கள் படிந்து, உணவு போன்ற வாசனையை உருவாக்குகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உணவு என்று எண்ணி உட்கொள்கின்றன‌. இது உயிரினங்களின் உடலில் சிறுகச் சிறுக பாதிப்பை அதிகரித்து இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு அதிகரிப்பும் கடலின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்த முக்கியக் காரணமாக மாறி இருக்கிறது.

மேலும், 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் அதாவது 800 கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன. 2025வது ஆண்டு காலகட்டத்தில் வருடத்துக்கு 1.75 கோடி டன் கழிவுகள் கடலில் கலக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றை உணர்ந்து பசுபிக் பிராந்திய நாடுகள், ‘ஓஷன் கிளீன் ஆப்’ என்ற திட்டத்தை 2018ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி, மாதம் 500 டன் கழிவுகளை கடலில் இருந்து எடுக்கின்றன. 2040ம் ஆண்டுக்குள் 90 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றன. ஆனால், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்தியா போன்ற நாடு கடலில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com