
அறுவடைக்குப் பிறகு மீதமாகும் வைக்கோல்களை வைத்து விவசாயிகள் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர். இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு வைகோல்களை அப்படியே விட்டும், சிலர் மாடுகளுக்கு தீவனமாக வழங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், பெரும் பகுதி விவசாயிகள் அறுவடைக்குப் பிறகான வைக்கோல்களை பெருமளவில் எரிக்கின்றனர். இதனால் பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
மேலும், இந்திய வேளாண் துறை காற்று மாசை குறைக்கும் விதமாக விவசாயிகளுக்கு வைக்கோல் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஆனாலும், அவற்றில் பயனில்லாமல் வைக்கோல்களை எரிக்கும் நிலை அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில், வைக்கோல் மேலாண்மை குறித்து பஞ்சாப் வேளாண் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ஏக்கர் கணக்கில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு மீதமாகும் வைக்கோல்களை பயன்படுத்தாமல் அப்படியே விட்டும், சிலர் குறைந்த அளவை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தி விட்டு மீதம் உள்ளவற்றை எரித்தும் விடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் குவிண்டால் வைகோல் பஞ்சாபில் எரிக்கப்படுகிறது. இதனால் பஞ்சாபின் காற்று மாசு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் 10 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வைக்கோலை பண்டல் செய்யும் இயந்திரத்தை சொந்தமாக வாங்கி, வைக்கோல்களை பண்டல் செய்து பேப்பர் ஆலைகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் குவிண்டால் வைக்கோலுக்கு 185 ரூபாய் என்று விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் 10 ஏக்கருக்கு 6000 குவிண்டால் வைக்கோல் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 10 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் அரசு வேளாண் துறையிடமிருந்து வாடகைக்கு இயந்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.