உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விலை உயர்ந்த பழம் ஸ்ட்ராபெர்ரி. மேலும், இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்க முடிகிறது. இதனாலேயே இந்தப் பழம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் காய்கறிகளுக்கு மாற்றாக தற்போது ஸ்ட்ராபெர்ரியை விளைவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த செலவில் அதிகளவிலான லாபத்தை ஸ்ட்ராபெர்ரி மூலமாக பெற முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், ‘ஸ்ட்ராபெர்ரியின் சிறிய பழங்கள் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பழங்கள் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரிக்கு அதிக அளவிலான உரங்கள் தேவையில்லை. மாட்டு சாணமும் தேவையான அளவு தண்ணீருமே போதுமானது. மற்ற வகை மருந்துகள் அடித்தால் பழம் வளராது. செடி சீக்கிரத்தில் அழிந்து விடும். அதனால் இயற்கையான வேப்ப எண்ணெயை மட்டும் அடித்தால் போதும். பூச்சிகள் பரவாமல் பாதுகாக்க முடியும். அதிக அளவிலான பராமரிப்பு தேவையில்லாத விவசாயம் இது.
மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீரால் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சீக்கிரத்தில் அழுகிவிடும். அதனால் மழைக்காலங்களில் மட்டும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீரை பாய்ச்சி பராமரித்தால் போதுமானது. ஒரு செடியில் ஒரு வருடத்திற்கு அரை கிலோ முதல் முக்கால் கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு லட்சம் செடி பயிர் செய்தால் 75 ஆயிரம் கிலோ வரை பழங்கள் கிடைக்கும். வருடம் முழுக்க விளைச்சல் தரக்கூடியது. பயிரிட்டு மூன்று மாதங்களில் சாகுபடிக்கு தயாராகும். ஒரு செடி ஒன்றரை வருடம் வரை ஸ்ட்ராபெர்ரி பழங்களைத் தரும். பிறகு மீண்டும் பயிரிட்டு ஸ்ட்ராபெர்ரியை பெற முடியும். ஜாம், ஒயின், அழகு சாதனப் பொருட்கள் என்று பலவற்றிற்கு ஸ்ட்ராபெர்ரி பயன்படுவதால் ஆலைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் நல்ல விலைக்கு ஸ்ட்ராபெர்ரியை விற்பனை செய்ய முடிகிறது’ என்று தெரிவிக்கிறார்.