வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், களைப்பு ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். கோடைக் காலத்தில் மனிதர்களைப் போலவே விலங்குகளும், பறவைகளும் வெயிலால் அதிக களைப்படைந்து தண்ணீருக்காக அலைகின்றன.
மழைக்காலங்களில் ஓரளவு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் பறவைகள், சிறு விலங்கினங்கள் கோடைக்காலத்தில் வறண்ட நிலையில் உணவுக்காகவும் நீருக்காகவும் அலைகின்றன. காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு வருடமும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களாலேயே தாங்க முடியாத இந்த வெயிலை சின்னஞ்சிறு பறவைகள் எப்படித் தாங்கும்?
அவற்றுக்கு நம்மாலான நீரும், உணவும் வைக்க, அதன் பசி, தாகம் தீரும். வைக்கும் உணவுகளை வெயில் படாத இடத்தில் வைக்க பறவைகள் வந்து உண்டு செல்லும். பொதுவாக, காக்கைக்கு பெரும்பாலும் உணவு வைக்கும் பழக்கம் உள்ளது. அதேபோல், மற்ற பறவைகளுக்கும் கோடையில் மட்டுமாவது, உணவளிப்பது நல்ல விஷயம் அல்லவா?
நாட்டில் பறவை இனங்கள் தற்போது அழிந்துகொண்டு வருகிறது. பறவைகள் சாப்பிட்டு எறியும் பழக்கொட்டைகள் மூலம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காடுகள் உருவாகின்றன. இந்த உணவுச் சங்கிலி அறுபடாமல் தடுக்க பறவையினங்களை நாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பறவை இனங்கள் சிறுக சிறுக அழிந்துவிடும். ஆறு, குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளில் கோடையில் தண்ணீர் வற்றி வருவதுடன், அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளாகக் கட்டி பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுகிறோம்.
மொட்டை மாடியில் சின்னஞ்சிறு பறவைகளுக்காக தானியங்களை தூவி வைக்கலாம். நம் வீட்டு மொட்டை மாடியில், வீட்டு ஜன்னல் பகுதியில், வாசல் பகுதியில், தோட்டம் இருப்பின் அங்கு, கார் ஷெட்டிலும் பறவைகளுக்காக சின்ன சின்ன கிண்ணங்களில் தண்ணீர் வைக்கலாம். தினமும் தண்ணீர் மீதமிருந்தால் அதை கொட்டி புதிதாக நீரை மாற்றிவிடலாம்.
வீட்டு வாசலில் ஒரு சிறிய பக்கெட்டில் தினம் தண்ணீர் வைக்க மாடுகள், ஆடுகள் போன்ற விலங்குகள் தண்ணீர் அருந்த சௌகரியமாக இருக்கும். அதேபோல், சிறுசிறு பறவைகளுக்காக அதன் பசியை போக்க வீட்டு மாடியில் அல்லது ஜன்னல் பகுதியில் சிறிதளவு உணவை தினம் வைக்க பறவைகளின் பசி, தாகம் தீரும்.
இந்த சிறிய மனிதநேய செயலால் நம்மால் பல உயிர்களைக் காத்திட முடியும். நம்மால் முடிந்த அளவு பறவையினங்கள் கோடையின் கடுமையால் அழியாமல் காத்திடலாம். சூழலின் உயிர்ப்புக்கு பறவைகள் மிகவும் அவசியம் என்பதை மறக்க வேண்டாமே!