இந்த உலகத்தில் ஏறத்தாழ 8,650 இனப்பறவைகள் உள்ளன. ஒரு பறவையை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள உதவுவது அதன் இனம். அந்த வகையில் இக்கட்டுரையில் பாறுக் கழுகு (Vulture) என்ற குடும்பத்தைச் சேர்ந்த இனங்களையும், அதற்கு ஏற்பட்ட அபாயத்தைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
23 பாறுக் கழுகு இனங்கள் இவ்வுலகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்பதை இந்தியாவில் காணலாம், அதில் நான்கு இனங்களை தமிழகத்தில் காணலாம். ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக இருந்த இக்கழுகின் எண்ணிக்கை, 1990களில் வேகமாக குறையத் தொடங்கியது. இன்று இந்தியா மற்றும் ஆசியாவில் அந்த இனமே முக்கால் பங்கிற்கு மேல் அழிந்துவிட்டது.
இந்தியாவில் மொத்தம் 9 வகை பாறுக் கழுகுகள் காணப்படுகின்றன. அவற்றுள் எருவை, கருங்கழுத்துப் பாறுக் கழுகு, வெண்முதுகுப் பாறுக் கழுகு மற்றும் வெண்கால் பாறுக் கழுகு இனங்களின் எண்ணிக்கை இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள துணைக் கண்டத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.
பாறுக் கழுகுகள் பிணந்திண்ணிகளா?
வல்சர் (Vulture) என்று அறியப்படும் பாறுக் கழுகுகள் அதன் உணவை வேட்டையாடி உண்பதில்லை. அவை இறந்ததை மட்டுமே உண்ணும் உயிர்கள். அவை இயற்கை சமநிலையைப் பேணுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றை பிணந்திண்ணிகள் அல்லது கழிவகற்றுபவை என்று கூறுவது தவறு. அவற்றை நாம் 'சுகாதாரப் பணியாளர்கள்' என்று தான் அழைக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தில் பாறுக் கழுகுகள்:
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு பறவைகள் பற்றிய ஆராய்ச்சியே இந்தியாவில் நடக்கவில்லை என்கிறார் புகழ்பெற்ற பறவைகள் ஆராய்ச்சியாளரான சலீம் அலி. ஆனால் 'சங்க இலக்கியத்தில் புள்ளினம்' என்ற புத்தகம், 62 இனங்களைச் சேர்ந்த பறவைகள் பற்றி நமது சங்க கால தமிழ் புலவர்கள் பாடியுள்ளதாக கூறுகிறது. எனவே, பறவைகள் குறித்த ஆராய்ச்சி இந்தியாவில் ஆங்கிலேயருக்கு முன் நடைபெறவில்லை என்றாலும், நமது முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அப்போது பறவைகளுக்கு எந்த ஆபத்தும் இருந்திருக்கவில்லை.
கழுகினத்தின் ஒரு வகையை தமிழில் வல்லூறு என்றும் வலசாரை என்றும் அழைக்கின்றனர். இது Vulture என்ற ஆங்கிலச் சொல்லோடு ஒத்துப் போவதை நோக்கலாம். 'பாறு' என்ற சொல்லிற்கு 'உலர்ந்த' மற்றும் 'வறண்ட' என்று தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. வறண்ட பிரதேசங்களில் இருக்கும் கழுகுகளை பாறுக் கழுகுகள் என்று அழைத்ததாக நாம் பொருள் கொள்ளலாம்.
அகநானூறில், தலைவனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண் தனது தோழியிடம், “பாலை நிலத்து கள்வர்கள் எய்த அம்புகளால் உயிரிழந்தவர்களின் உடலை உண்ணும் பாறுக் கழுகுகள் வாழும் இடத்தை எனது காதலன் கடந்து சென்றுள்ளான், அவனுக்கு என்ன ஆனதோ!” என்று புலம்பும் தொணியில் ஓர் பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாறுக் கழுகுகளின் உடலமைப்பு மற்றும் பழக்க வழக்கங்கள்
இந்த வகை கழுகுகள் பொதுவாக திறந்த வெளியையும், இலையுதிர் காடுகளையும், ஊர்ப்புறத்தையும் பெரிதும் நாடுகின்றன. அடர்த்தியான காடுகளைக் காட்டிலும், வெட்ட வெளியில் சடலங்கள் எளிதில் தென்படுகின்றன என்பதே காரணம். அதே போல, இவற்றுக்கு பெரிய இறக்கைகள் உள்ளன, அதனால், உச்சி வெய்யில் காலத்தில் இவற்றால் சுலபமாக பறக்க இயலும் மற்றும் தனது உணவையும் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
இக்கழுகுகள் கண்ணுக்கெட்டாத தூரம் சென்று மிதப்பதில் கெட்டிக்காரர்கள். தொலைநோக்கி போன்று அமையப்பெற்ற இவற்றின் கண்களால் 6 கிமீ தூரம் வரை எளிதில் காண இயலும்.
இவற்றின் குடல் நீளமாக இருப்பதால் இவை உண்ணும் இரையை முற்றிலும் செரிமானம் செய்யும் திறன் பெற்றவை.
இவை மெதுவாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் ஆண்டொன்றுக்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். தகுந்த சூழல் அமையாவிட்டால் இனப்பெருக்கத்தையே அந்த ஆண்டு தவிர்த்து விடும். எனவே இவர்கள் எண்ணிக்கையை அழிவிலிருந்து காப்பது மேலும் முக்கியமாகிறது.
பாறுக் கழுகுகளின் மறைவுக்கு என்ன காரணம்?
பம்பாயைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் முனைவர் வி.பு.பிரகாஷ் 1987இல் 353 ஜோடி பாறுக் கழுகளின் கூடுகளை இராஜஸ்தானில் உள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவில் கண்டதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், 1996இல் அங்கு ஒரு ஜோடி பாறுக் கழுகு கூட இல்லாத நிலையைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து அவர் மேலும் ஆய்வுகள் நடத்த, மரங்களின் கீழ் பாறுக் கழுகுகள் கொத்து கொத்தாக இறந்து கிடந்ததை பார்த்து திகைத்துப்போய் அதையும் ஆவணப் படுத்தினார். இவரே பாறுக் கழுகுகளின் திடீர் மறைவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மைக் பாண்டே என்பவர், 'மறைந்து வரும் பாறுக் கழுகுகள்' (Vanishing Vultures) என்ற ஆவணப்படத்தின் மூலம் உலகளவில் பாறுக் கழுகுகளின் மறைவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு, அந்த இனம் அதிகமாக உண்ணும் கால்நடைகளின் சடலங்களை ஆய்வு செய்தது.
அப்போது 1990களில் 'டைக்குளோபினாக் ' (Diclofenac) என்ற மருந்து மாடுகளுக்கு மடி வீக்கம் மற்றும் சுளுக்கு ஆகிய நோய் கூறுகளுக்கு தரப்படுகின்றன என்றும், அந்த மருந்து செலுத்தப்பட்ட மாடுகளின் சடலங்களை உண்டதால் இந்தக் கழுகுகள் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இறந்தன என்பதையும் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்புக்கு முனீர் விரானி என்ற விஞ்ஞானிக்கு ' பசுமை ஆஸ்கார் ' விருது 2018இல் கொடுக்கப்பட்டது.
கால்நடை பயன்பாட்டுக்கு டைக்குளோபினாக் தடை:
பல்வேறு இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்களின் எச்சரிக்கைகள் மற்றும் சட்ட போராட்டங்களுக்கு பிறகு, இந்திய அரசின் தலையீட்டின் பேரில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் டைக்குளோபினாக் மற்றும் அதன் மாற்று மருந்தான கீட்டோபுருபேன் ஆகியவற்றை கால்நடை பயன்பாட்டிற்கு தடை செய்தது. மனித பயன்பாட்டிற்கான டைக்குளோபினாக் 30 மில்லிக்கு பதில் 3 மில்லி பாட்டிலில் வெளிவர வேண்டும் என்றும் ஜூலை 2015இல் உத்தரவிட்டது. இதற்கு பின் பாறுக் கழுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தும் பல கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு முழுமையாக கிட்டவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பாறுக் கழுகுகளின் தற்போதைய நிலை:
நீலகிரியைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஆகிய பகுதிகளில் பாறுக் கழுகுகள் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் சீகூர் பள்ளத்தாக்கில் சமீபத்திய கணக்கெடுப்பின் படி அங்கே 110 - 120 வெண்முதுகுப் பாறுக் கழுகுகளும், 11-12 கருங்கழுத்துப் பாறுக் கழுகுகளும், 5 - 6 செந்தலைப் பாறுக் கழுகுகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த இந்த பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை இன்று இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அருளகம் என்ற அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் விடா முயற்சியால் இது சாத்தியமாயிற்று.
இறந்து போன உயிரைத் தின்று நோய் பரவாமல் நம்மையும், காட்டிலுள்ள பிற விலங்குகளையும் காக்கும் பாறுக் கழுகுகளை நாம் நேசிக்காவிட்டாலும், அவற்றை அழிவில் இருந்து காப்பாற்ற உதவுவோம். பாறுக் கழுகின் முக்கியத்துவம், அவை இருக்கும் ஆபத்தான நிலை மற்றும் அவை இறக்க காரணமாக இருக்கும் அமிலங்கள் பற்றி நாம் நமது சுற்றத்தாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
தற்போது முதுமலை, சத்தியமங்கலம் பகுதிகளில் விலங்குகள் இறக்க நேர்ந்தால் அவற்றைப் புதைப்பதில்லை, அப்படியே அவற்றை பாறுக் கழுகுகள் உள்ளிட்ட 'இயற்கை துப்புறவாளர்களுக்கு' இரையாக விட்டுவிடுகின்றனர். அதே போல நம் தெருவுக்கு அருகில் விலங்குகள் இறந்தால் அதனை புதைக்காமல் வனாந்திரமான இடத்தில் போட்டால் மைனாக்கள், பன்றிகள், ஈக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் ஏற்றம் பெறும்.
பாறுக் கழுகுகளின் இனம் ஒவ்வொன்றிலும் 800 ஜோடிகள் இருந்தால்தான் அவை ஓரளவு பாதுகாப்பாக உள்ளன என்று சொல்ல முடியும் . இப்போது உள்ள எண்ணிக்கை இரட்டிப்பாகவே இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் இயற்கை வல்லுநர்கள். எனவே நாம் செல்ல வேண்டிய தூரம் ஏராளம்!